> வாரத்தின் 6நாட்கள் பள்ளி; வருகைப் பதிவேடு கிடையாது வீட்டருகேயுள்ள பள்ளிக்கும் செல்லலாம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

வாரத்தின் 6நாட்கள் பள்ளி; வருகைப் பதிவேடு கிடையாது வீட்டருகேயுள்ள பள்ளிக்கும் செல்லலாம்

 புதுச்சேரியில் வாரத்தின் 6நாட்கள் பள்ளி; வருகைப் பதிவேடு கிடையாது வீட்டருகேயுள்ள பள்ளிக்கும் செல்லலாம்



      வாரத்தின் ஆறு நாட்கள் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி இயங்கும். 3 நாட்களுக்கு 9, 11-ம் வகுப்புகளுக்கும், 10,12-ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும் நடக்கும். வருகைப் பதிவேடு கிடையாது. வீட்டருகேயுள்ள பள்ளிக்குச் சென்றும் கூட, பாட சந்தேகங்களுக்கு மாணவ, மாணவிகள் தீர்வு காணலாம் என்று பள்விக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்தார்.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, புதுவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''புதுச்சேரி, காரைக்காலில் வரும் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வகுப்புகள் 8-ம் தேதி முதல் தொடங்கும். 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பள்ளி, வகுப்பறைகள் மாணவ, மாணவிகள் வருகைக்காக தூய்மைப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படும். தனிமனித இடைவெளியுடன் இருக்கை அமைத்தல், கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்குக் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

9, 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பள்ளிக்கு வரலாம் என தெரிவித்துள்ளோம். வாரத்தில் 5 நாட்கள் பள்ளி நடந்து வந்தது. தற்போது 6 நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். திங்கள், புதன், வெள்ளி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை அரை நாள் வகுப்புகள் இருக்கும். மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம். இதற்காகத் தனியாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.

மாணவர்கள் கட்டாயம் வகுப்பறைக்கு வரவேண்டும் என அவசியமில்லை. அவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது. மாணவர் பேருந்துகளை இயக்குவது குறித்து வருவாய்த் துறை முடிவு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிற்கு அருகில் பள்ளிகள் இருக்காது. மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குச் சென்றுகூட அங்குள்ள ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்கலாம். மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் அவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரக்கூடாது. ஆசிரியர்களும் கரோனா பாதிப்பு, அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வரக்கூடாது.

தனியார் பள்ளிகள் முழுநேரம் பள்ளி நடத்த அனுமதி கிடையாது. இதுகுறித்துக் கல்வித்துறைக் குழு கண்காணிக்கும். விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும். மாணவர்களுக்கு முகக் கவசம் வழங்குவது பற்றி அரசிடம் தெரிவித்துத் திட்டமிடுவோம். மதிய உணவு வழங்குவது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்.

முழுமையாகப் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும். மாஹே, ஏனாமில் அந்தந்த மண்டல நிர்வாகிகள் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வார்கள். தற்போது அங்கு பள்ளி திறப்பு இல்லை''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.


Share:

0 Comments:

Post a Comment