அதிக அளவிலான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்துக் கருத்துக் கேட்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது.
எனினும் கரோனா தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு எழுந்தது. இதனால் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
நவம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில், 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இந்நிலையில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ''கோவிட்- 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடங்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். கூட்டத்துக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை அளவீடு செய்ய வேண்டும். அதன்பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவிலான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்துக் கருத்துக் கேட்க வேண்டும். இந்த விவரங்களை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment