தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள தாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம்வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலைநாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாகமுடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடுவார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.இதுதவிர, பள்ளிக்கு வர இயலாமல் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்கள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment