தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு – புதிய அரசு எடுக்கப்போகும் முடிவு?
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு திறம்பட நேரடி வகுப்புகள் நடத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா 2வது அலை புதிய உச்சத்தை அடைந்து வருவதால், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு எப்போது:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு பக்கம் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டாலும், அது அவர்களின் கற்றல் திறனை பாதிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது.
அதனால் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் என பல்வேறு வழிமுறைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஆன்லைன் கல்வி முறைகளில் மாணவர்கள் பெரிதளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர்களின் கற்றல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட போதிலும் கொரோனா 2வது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடத்த புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பிள்ளைகளை அனுப்ப தயாராக உள்ளதாக சில பெற்றோர்கள் கூறி உள்ளனர்.
இதனால் ஒத்திவைக்கப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மீண்டும் நடத்துவது, ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பீடு விபரங்களை அறிவிப்பது, அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு என புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் முன் உள்ளன. இதில் என்ன முடிவுகளை அரசு எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment