> 8th Social Science Lesson 2 Notes in Tamil வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Social Science Lesson 2 Notes in Tamil வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8th Social Science Lesson 2 Notes in Tamil

TNPSC GK 8th social Lesson 2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

அறிமுகம்

  • 15ஆம் நூற்றாண்டில் நிலவழியாகவும், கடல் வழியாகவும் புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக ஐரோப்பா விளங்கியது. 1498 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தார்.

  • இத்தகைய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தின் மூலம் அதிக லாபம் பெறுவதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும். வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இதன் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிறுவப்படுதல்

பிளாசிப்போர் (1757)

வங்காள நவாப் அலிவர்திகான் 1756ல் இறந்த பின்பு அவரது பேர சிராஜ் –உத்-தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

சிராஜ்-உத்-தௌலாவின் பலவீனத்தையும், புகழற்ற நிலையையும் தனக்கு சாதகமாக்கிய ஆங்கிலேயர்கள் அவரது அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தனர். ஆங்கிலேயரின் இவ்வெண்ணத்தை புரிந்துகொண்ட சிராஜ்-உத்-தௌலா அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.

கல்கத்தாவிலுள்ள அவர்களது குடியேற்றப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி . வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள வணிக மையத்தை கைப்பற்றினார்.

1756 ஜுன் 20 அன்று ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம் சரணடைந்தது. ஆனால் ஆங்கிலப் படைத்தளபதி ராபர்ட் கிளைவ் கல்கத்தாவை மீட்டார்.

இருட்டறை துயரச் சம்பவம் (1756)

சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர். மறுநாள், காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் ‘இருட்டறை துயரச் சம்பவம்’ என்றழைக்கப்படுகிறது.

இறுதியாக, 1757 பிப்ரவரி 9ஆம் நாள் நடைபெற்ற அலிநகர் உடன்படிக்கையின்படி சிராஜ்-உத்-தௌலா, இராபர்ட் கிளைவின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்.

பின்னர் மார்ச் 1757ல் பிரெஞ்சுக் குடியேற்றமான சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றினார். பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா , பிரெஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள் நடைபெற்றது.

இப்போரில் சிராஜ்-உத்-தௌளாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன. இப்போரின் முடிவில் ஏற்பட்ட குழப்பத்தால் கம்பெனி வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்தியது.

பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தையும் நீடிக்கவும் செய்தது.


பக்சார் போர் (1764)

1757 ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்றனர்.

வங்காளத்தின் ’24 பர்கானா’ எனும் பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்.

பிளாசிப் போருக்குப்பின் வங்காளத்தின் அரியணை ஏறிய மீர்ஜாபர் (1757-1760) ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து நீக்கி விட்டு அவரது மருமகன் மீர்காசின் என்பவரை வங்காள நவாப் ஆக்கினார்.

மீர்காசிம் ஆங்கிலேயருக்கு புர்த்வான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய பகுதிகளை வழங்கினார்.

அவர் வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார்.

தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.

ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தௌலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.

பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130. கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமே பக்சார் ஆகும்.

1764ஆம் ஆண்டு அக்டோபர் 22ல் இங்கு நடைபெற்ற போரில் சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசின் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ-வால் தோற்கடிக்கப்பட்டனர்.

இது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தீர்க்கமான வெற்றியாக அமைந்தது. போரின் முடிவில் மீண்டும் மீர்ஜாபர் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டார்.

மீர்ஜாபரின் இறப்புக்குப் பின் அவரது மகன் நிஜாம்-உத்-தௌலா வங்காள நவாம் ஆனார்.

1765 பிப்ரவரி 20ல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது. அதன்படி வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும் பக்தியை கலைத்துவிட வேண்டும் எனவும், கம்பெனியால் நியமிக்கப்பட்ட துணை சுபேதார் மூலம் இனி வங்காளம் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இராபர்ட் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலாவுடனும், முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்துடனும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இவ்வாறாக இராபர்ட் கிளைவ் வங்காளத்தில் இரட்டையாட்சி முறையை கொண்டு வந்தார்.

கர்நாடகப் போர்கள்

18ஆம் நூற்றாண்டில் மூன்று கர்நாடகப் போர்கள் பல்வேறு இந்திய ஆட்சியாளர்களிடையே நடைபெற்றது.

இதில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியும் எதிர் எதிர் அணியில் இருந்தது.

பாரம்பரியமாக, ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் போட்டி நாடுகள் ஆகும். அந்நிலை இந்தியாவில் வணிகம் செய்வதிலும் தொடர்ந்தது.

இதன்விளைவாக தொடர் இராணுவ போட்டி தென்னிந்தியாவின் கர்நாடகப் பகுதியில் நடைபெற்றது. அவை கர்நாடகப் போர்கள் எனப்படுகின்றன.

இவை 1746 முதல் 1763 வரை நடைபெற்றது. இப்போரின் விளைவாக ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுபெற்றது.


முதல் கர்நாடகப் போர் (1746- 1748)

ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரில் பிரிட்டனும், பிரான்சும் எதிர் எதிர் அணிகளில் இருந்தன. இந்த பகைமை இந்தியாவிலும் எதிரொலித்தது.

அடையாறு போர் (1746)

சென்னையின் அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ள சாந்தோம் என்ற இடத்தில் கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும் பிரெஞ்சுப்படைக்கும் இடையே இப்போர் நடைபெற்றது.

அன்வாருதீன் ஆங்கிலேயரின் உதவியை நாடினார். கேப்டன் பாரடைஸ் தலைமையிலான மிகச் சிறிய பிரெஞ்சுப் படை மாபூஸ்கான் தலைமையிலான மிக வலிமை வாய்ந்த நவாப் படையினை தோற்கடித்தது.

நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு இதுவே ஆகும்.


அய்-லா-சப்பேல் உன்படிக்கை (1748)

ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் அய்-லா-சப்பேல் உடன்படிக்கையின் மூலம் முதல் கர்நாடகப்போர் முடிவுக்கு வந்தது.

இதன்படி மதராஸ் (சென்னை) ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாறாக வட அமெரிக்காவின் சில பகுதிகளை பிரான்சு பெற்றது.

இரண்டாம் கர்நாடகப் போர்(1749 -1754)

கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தா சாகிப்பும் உரிமை கோரினர். அதேபோல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்-ம் உரிமை கோரினர்.

இதனால் தக்காண பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்-க்கும் உதவி செய்தனர்.

ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங்-க்கும் உதவினர்.இப்போர் மூல இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் எண்ணினர்.

ஆம்பூர் போர் (1749)

இதன் விளைவாக , ஆகஸ்ட் 3, 1749ல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர்ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பி ஆடினார். சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கினர். அதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக பிரெஞ்சுக்காரர்களுக்கு அவர் வழங்கினார்.

தக்காணத்திலும் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

முசாபர் ஜங் ஐதராபாத்தின் நிசாம் ஆனார். புதிய நிசாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார்.

அவர் கிருஷ்ணா நதியின் தென் பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளே-யை ஆளுநராக நியமித்தார். 1751ல் தன் மக்களால் முசாபர் ஜங் படுகொலை செய்யப்பட்டார்.

நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத் ஜங் பிரெஞ்சுப் படைத்தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிசாம் ஆனார்.

அவர் குண்டூர் மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.

இதன் மூலம் டியூப்ளே-ன் அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது.

ஆற்காட்டுப் போர் (1751)


இத்தருணத்தில் டியூப்ளே, முகமது அலி தஞ்சம் புகுந்த திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார்.

இம்முயற்சியில் சந்தா சாகிப்பும் (கர்நாடக நவாப்) தன்னை பிரெஞ்சுசுப் படைகளோடு இணைத்துக் கொண்டார். இச்சமயத்தில் ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார்.

ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ், இராபர்ட் கிளைவ்-ன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.

லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தார்.

அதேசமயத்தில், சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார். அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார். இத்தோல்வியால் பிரான்சு நாட்டு அரசாங்கம் டியூப்ளே-வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.

பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)

டியூப்ளேவைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்ற கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்து கொண்டார்.

இதன்படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

மேலும் புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது. இவ்வுடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றனர்.

இரண்டாம் கர்நாடகப் போர் ஒரு முடிவுற்ற நிலையை உணர்த்தியது. முகமது அலியை கர்நாடக நவாப் ஆக நியமித்ததின் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினர்.

ஹைதராபாத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வலிமையுடன் காணப்பட்டாலும் இப்போர் அவர்கள் தக்காணப் பகுதியில் வலிமை குன்றியவர்கள் என்பதை நிரூபித்தது.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756-1763)

ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப்போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

இச்சமயத்தில் ஆங்கில படைத்தளபதி இராபர்ட் கிளைவ் பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில் ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியையும் வழங்கினார்.

இப்போரில் பிரெஞ்சு படைகளை வழி நடத்த கவுண்-டி-லாலியை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது. அவர் கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எளிதாக கைப்பற்றினார்.

கர்நாடகப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட தன்னுடன் இணையுமாறு புஸ்ஸிக்கு , கவுண்-டி-லாலி உத்தரவிட்டார்.

புஸ்ஸி ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் (ஆந்திர பிரதேசம், ஒடிசா) பகுதிகளை கைப்பற்ற கர்னல் போர்டை வங்கத்திலிருந்து இராபர்ட் கிளைவ் அனுப்பினார்.

வந்தவாசிப் போர் (1760)

1760 ஜனவரி 22ல் நடைபெற்ற இப்போரில் ஜெனரல் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தது.

பின்னர் ஓர் ஆண்டுகள் இந்தியாவிலிருந்த அனைத்துக் குடியேற்றங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் இழந்தனர்.

கவுண்டிலாலி பிரான்சு நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

பாரிசு உடன்படிக்கை 1763

ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் பாரிசு உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.

அதன்படி பாண்டிச்சேரி உட்பட இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக்குடியேற்றங்கள் அனைத்தும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் திரும்ப கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தங்கள் பகுதிகளை பலப்படுத்தவும், படைகளை பெருக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இதன்மூலம் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மைசூரும், ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும்

ஹைதர் அலியின் தலைமையில் மைசூர் சமஸ்தானம் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சியைப் பெற்றது.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிராக ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் முக்கிய பங்காற்றினர்.

இருவரும் வீரதீரத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தனர்.

1761ல் ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார். மேலும் அவர் ஆங்கிலேயருக்கு வலிமைமிக்க எதிரியாகவும் திகழ்ந்தார்.

முதல் ஆங்கிலேய – மைசூர் போர் (1767 – 1769)

காரணங்கள்

ஹைதர் அலியின் வளர்ச்சி , அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.

போரின் போக்கு

தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன் ஹைதராபாத் நிசாம் 1767ல் மைசூர் மீது படையெடுத்தார்.

ஆங்கிலப் படையை ஹைதர் அலி தோற்கடித்து மங்களூரைக் கைப்பற்றினார்.

1769 மார்ச் மாதம் ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார். இதனால் ஆங்கிலேயர்கள் 1769 ஏப்ரல் 4ல் அவரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

மதராஸ் உடன்படிக்கை (1769)

போரின் முடிவில் மதராஸ் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.அதன்படி போருக்கு முன்னர் இருந்த பகுதிகளை இருதரப்பினரும் திரும்பப்பெற்றனர்.

மற்ற நாடு தாக்கும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என உறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780-1784)

காரணங்கள்

1769ல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றத் தவறினர்.

1771ல் மராத்தியர்கள் ஹைதர் அலி மீது படையெடுத்த போது மதராஸ் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு உதவவில்லை.

ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சுக் குடியேற்றப்பகுதியான மாஹியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிசாம், மராத்தியர்களின் முக்கூட்டணியை உருவாக்கியது.

போரின் போக்கு

1781ல் ஆங்கிலேய படைத்தளபதி சர் அயர்கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை (போர்டோ நோவா) என்ற இடத்தில் தோற்கடித்தார்.

மேலும் மைசூர் படைகள் சோளிங்கர் என்ற பகுதியிலும் தோல்வியை தழுவியது.

போரின்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி 1782ல் இறந்தார். அவரின் இறப்புக்குப்பின் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரினைத்தொடர்ந்தார்.

1783ல் திப்பு ஆங்கிலேய படைத்தளபதியான பிரிகேடியர் மேத்யூஸ் மற்றும் அவரது படைவீரர்களையும் கைது செய்தார். இது பின்னாளில் திப்புவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.


மங்களூர் உடன்படிக்கை (1784)

1784 மார்ச் 7ல் ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கு இடையே இவ்வுடன்படிக்கை கையெழுத்தானது. இருபிரிவினரும் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப அளிப்பதும், போர்க் கைதிகளை ஒப்படைப்பதும் என உடன்பாடு ஏற்பட்டது.

இதன் மூலம் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலிமை மிக்க எதிரிகளான மராத்தியர்கள் மற்றும் ஹைதர் அலியிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார்.

இச்சமயத்தில் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை பிரிட்டன் இழந்தபோதிலும், வாரன்ஹேஸ்டிங்ஸ் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை. மாறாக இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 – 1792)

காரணங்கள்

மங்களூர் உடன்படிக்கைப்பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்பு சுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.

ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்பு சுல்தான் 1789ல் தாக்கினார்.

இச்சமயத்தில் திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து மூவர் கூட்டணியை உருவாக்கினர்.

போரின் போக்கு

இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்து போராடினார். இப்போர் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

தளபது மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆகையால் 1790ல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்குவதற்கு தடையாக இருந்த அனைத்து மலைக்கோட்டைகளையும் அவர் கைப்பற்றினார். நம்பிக்கை இழந்த சுல்தான் ஆங்கிலேயரிடம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட காரன்வாலிஸ் 1792ல் ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கையை திப்பு சுல்தானுடன் செய்து கொண்டார்.

ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை (1792)

இவ்வுடன்படிக்கையின்படி, திப்பு தன்னுடைய ஆட்சிப்பகுதியில் பாதி பகுதியை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார்.

போர் இழப்பீட்டு தொகையாக 3.6கோடி செலுத்த வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டும் என திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதன்மூலம் ஆங்கிலேயர்கள் மலபார், குடகு மலை, திண்டுக்கல் மற்றும் பாரமஹால் (கோயம்புத்தூர், சேலம்) ஆகிய பகுதிகளைப் பெற்றனர்.

நான்காம் ஆங்கிலேட – மைசூர் போர் (1799)

திப்பு சுல்தான் 1792ல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் காரன்வாலிஸ் பிரபுவால் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை.

காரணங்கள்

திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக இம்முறையும் வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்ச்ய் ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார்.

அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.

பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள். மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.

போரின் போக்கு

1799ல் வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்தார். இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது.

திட்டமிட்டபடி மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபது ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது. இச்சமயத்தில் மெட்ராஸ் இராணுவம் தலைமை ஆளுநரின் சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.

திப்பு தன்னுடைய தலைநகரம் ஸ்ரீரங்கபட்டிணத்திற்கு பின் வாங்கினார்.

1799 மே 24ஆம் நாள் ஸ்ரீரங்கபட்டிணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுல்தான் வீரதீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார்.

இவ்வாறாக நான்காம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது. மேலும் ஒட்டுமொத்த மைசூரும் ஆங்கிலேயர் முன்பாக சரணடைந்தது.

போருக்கு பின் மைசூர்

கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.

மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.

திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆங்கிலேய மராத்திய போர்கள்

மூன்றாம் பானிபட் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க மராத்தியர்கள் முயற்சித்தனர். அதன் விளைவாக பத்தாண்டுகளுக்குப் பிறகு தங்கள் மீதான டெல்லி முகலாயர்களின் கட்டுப்பாட்டை மீட்டனர். எனினும் பேஷ்வா கட்டுப்பாட்டி இருந்த பழைய மராத்தாஸ் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 5 சுதந்திரமான மாநிலங்களுக்கு வழிவகுத்தது.

அவர்கள் புனாவில் பேஷ்வா, பரோடாவில் கெய்க்வாட், நாக்பூரில் போன்ஸ்லே, இந்தூரில் ஹோல்கர், மற்றும் குவாலியரில் சிந்தியா போன்றோர்களாவர்.

பேஷ்வா அரசாங்கம் உள்நாட்டு போட்டியாளர்களால் பலவீனப்படுத்தப்பட்டது, மற்ற நான்கு தலைவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி விரோதமாக எதிர்த்தனர்.

இருந்தபோதிலும், மராத்தியர்கள் பலம் வாய்ந்த சக்தியாகவோ இருந்தனர். மராட்டியர்களுக்கிடையிலிருந்த, இம்மோதல்களை பிரிட்டிஷார் அவர்களது விரிவாக்க கொள்கைக்கு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.

முதல் ஆங்கிலேய மராத்தியப்போர் (1775 -1782)

மராத்தியர்களின் பேஷ்வா, நாராயணராவின் இறப்புக்குப் பிறகு அடுத்த பேஷ்வா யார் என்ற உரிமை பிரச்சனையில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் தலையிட வேண்டியிருந்தது.

நாராயணராவ் இறந்தபிறகு , ரகுநாத ராவ் (ராகோபா) பேஷ்வா ஆனார். ஆனால் அவரது அதிகாரத்திற்கு எதிராக பூனாவிலிருந்த ஒரு குழு நானா பட்னாவிஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது.


அக்குழு நாராயண ராவின் மறைவுக்குப் பின் அவரது மனைவியான கங்கா பாய்க்கு பிற குழந்தையை(இரண்டாம் மாதவ ராவ்) பேஷ்வாவாக அங்கீகரித்தது.


மேலும் அவருடைய பெயரில் ஆட்சிக் குழுவொன்றும் அமைத்தது. அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ரகுநாத ராவ் பிரிட்டிஷ் உதவியை அணுகினார்.


இதன்படி, 1775ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் சூரத் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை இருப்பினும் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

பூனாவின் பாதுகாப்பரசுடன் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் பூனாவுக்கு கர்னல் ஆப்டனை அனுப்பியது. அதன்படி, அப்டன் 1776ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்துகொண்டார். ஆயினும், பம்பாயில் ஆங்கில அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.


1781ஆம் ஆண்டில், வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாமின் தலைமையின்கீழ் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார்.


அவர் மராத்தியத் தலைவரான மகாதாஜி சிந்தியாவை பல போர்களில் தோற்கடித்து குவாலியரைக் கைப்பற்றினார்.

1782ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.


விளைவுகள்

போரின் முடிவில் இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.


பிரிட்டிஷ் அரசுக்கு சால்செட் பகுதி வழங்கப்பட்டது.

இந்திய அரசியலில் சால்பை ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே அடுத்த 20 ஆண்டுகளுக்கு சமாதான உறவு நீடித்தது.


மராத்தியர்களின் உள்நாட்டு விவகாரம்

முதல் மராத்தியப் போரின் முடிவில் மராத்தியர்களின் உள்விவகார பிரச்சனை மேலும் மோசமடைந்தது.

நானா பட்னாவிஸின் அதிகார வளர்ச்சியைக்கண்டு மகாதாஜி சிந்தியா பொறாமை கொண்டார்.

இதன் காரணமாக ஆங்கிலேயரின் ஆதரவை அவர் பெற முற்பட்டார். இளம் பேஷ்வாவான இரண்டாம் மாதவ ராவ் மராத்தியர்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார், ஆனால் அவரால் மராத்தியத் தலைவர்களின் ஆதிக்கப் போட்டியை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், மகாதாஜி சிந்தியா 1794ல் இறந்தபின் அவருடைய மருமகன் தௌலத் ராவ் சிந்தியா பதவியேற்றார்.

சிந்தியாவின் மரணம் பூனாவில் நானா பட்னாவிஸின் அதிகாரத்தை இழக்கச் செய்தது. மேலும் ஆங்கிலேயர்கள் தங்களது செல்வாக்கை வடஇந்தியாவில் விரிவுபடுத்த வலிகோலியது.

பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் 1795ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட பிறகு, ரகுநாதராவின் வலிமையற்ற மகனான இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா ஆனார். இத்தருணத்தில் 1800ல் நானா பாட்னாவிஸ் மரணம் பிரிட்டிஷாருக்கு மேலும் நன்மை அளிப்பதாக இருந்தது.

ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் மற்றும் தௌலத் ராவ் சிந்தியா ஆகியோர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், பேஷ்வா ஹோல்கருக்கு எதிராக சிந்தியாவை ஆதரப்பதாகவும், பேஷ்வாவும் சிந்தியாவும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதன் விளைவாக 1802ல் ஹோல்கர், பேஷ்வாவுக்கு எதிராக படையெடுத்து, சிந்தியா மற்றும் பேஷ்வாவின் கூட்டுப் படைகளை தோற்கடித்தார். முடிவில் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லெஸ்லி பிரபுவை அணுகினார்.

பேஷ்வாவை வரவேற்ற வெல்லெஸ்லி பிரபு, அவரோடு 1802ல் பஸ்ஸீன் உடன்படிக்கையை செய்துகொண்டார்.

இவ்வுடன்படிக்கையின்படி துணைப்படை திட்டத்தை பேஷ்வா ஏற்றுக்கொண்டார். மேலும் ஆங்கிலேயர்கள் ஆர்தர் வெல்லஸ்லியின் உத்தரவின் கீழ் பூனாவை நோக்கி படையெடுத்துச் சென்று மராத்தியத் தலைவர் ஹோல்கரின் படைகளை தாக்கி அழித்தனர்.


இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1803 -1805)

பேஷ்வா துணைபடைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே ஆகியோர் மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆங்கிலேயரின் இராணுவம் ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையில், அஸ்ஸே மற்றும் அரகான் பகுதியில் சிந்தியா மற்றும் போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப்படைகளை தோற்கடித்தது. இவ்வெற்றிக்குப்பின் சிந்தியாவுடன் சுர்ஜீ-ஆர்ஜுகான் ஒப்பந்தத்தையும், போன்ஸ்லேவுடன் தியோகான் ஒப்பந்தத்தையும் 1803ல் ஆங்கிலேயர்கள் செய்துகொண்டனர்.

ஆனால் போரில் ஈடுபடாத யஸ்வந்த் ராவ் ஹோல்கர் (ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் எனவும் அழைக்கப்படுகிறார்) இன்னும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியவில்லை.


பின்னர் 1804ல் ஜெய்ப்பூர் பிரதேசத்தௌ ஹோல்கர் சூறையாடும்போது ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக போர்தொடுத்தனர்.

ஆங்கிலேயருக்கு எதிராக யஷ்வந்த் ராவ் ஹோல்கர் இந்திய ஆட்சியாளர்களை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது.

இறுதியில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் மரத்திய தலைவர்கள் ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.


விளைவுகள்

இப்போருக்கு பின் மராத்தியர்களின் வலிமை காலப்போக்கில் பலவீனமடைந்தது.

இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறத்தொடங்கியது.

மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 -1818)

தங்களது மேலாண்மையை மீண்டும் பெற முயன்ற மராத்தியர்களோடு ஆங்கிலேயர்கள் மூன்றாவதாக ஒரு போரில் ஈடுபட்டனர்.

இப்போர், இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராத்திய சாம்ராஜ்யத்திற்கு இடையே இறுதி மற்றும் தீர்க்கமான மோதலாக அமைந்தது.

இப்போர், ஆக்கில படைவீரர்கள் மராத்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பில் தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபுக்கு, ஜெனரல் தாமஸ் ஹில்லாப் தலைமையின் கீழ் ஒரு படைப்பிரிவு உதவியது.

பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகளை தொடர்ந்து, நாக்பூரின் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லேவும் , இந்தூரின் மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கரும் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

ஆனால் குவாலியரின் தௌலத் ராவ் சிந்தியா மட்டும் நடுநிலை வகித்தார்.

காட்கி, கோர்கான் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களின் பேஷ்வா தோற்கடிக்கப்பட்டார், பேஷ்வாவின் படைகள் பல இடங்களில் அவர் பிடிபடுவதைத் தடுத்து நிறுத்தின. இதனைத் தொடர்ந்து சித்தாபால்டி போரில் போன்ஸ்லேவும், மகித்பூர் போரில் ஹோல்கரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.


விளைவுகள்

இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.

பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.

தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தபட்டன.

மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது. அவை குடிமைப்பணிகள் இராணுவம், காவல், மற்றும் நீதித்துறை ஆகும்.

குடிமைப்பணிகள்

‘சிவில் சர்வீஸ்’ (குடிமைப் பணிகள்) என்ற வார்த்தை முதன் முதலில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் பயன்படுத்தப்பட்டது. இது குடிமைப் பணி ஊழியர்களை, இராணுவ அதிகாரிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது.

சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல் ஆகிய குடிமைப் பணியின் முதன்மைப் பணியாக இருந்தது. ஆரம்பத்தில் வியாபார ரீதியாக இருந்த குடிமைப் பணிகள் பின்னர் பொதுப்பணியாக மாறியது.

முதலில் பொதுப்பணியின் நியமனங்கள் அனைத்தும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் அவையின் தனியுரிமையாக இருந்தது.

ஆனால், நியமனம் செய்யப்பட்ட பொது பணியாளர்கள் லஞ்சம் , ஊழல், சட்ட விரோத வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதனால் தலைமை ஆளுநராக காரன் வாலிசு 1786ல் பதவியேற்ற போது தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றினார். கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக அவர்களை மாற்றினார்.

1798ல் இந்திய கவர்னர் ஜெனரலாக பதவியேற்றுக் கொண்ட வெல்லெஸ்லி பிரபு, அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தினார்.

இவர் 1800ல் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறையில் பயிற்சி வழங்குவதற்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.

அதேவேளையில் கம்பெனியின் இயக்குநர்கள் இதனை ஏற்க மறுத்து, 1806ல் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்திய கல்லூரியை நிறுவினர்.

போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் 1833ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது. ஆனால் கம்பெனியின் இயக்குநர் அவையால் நியமனம் செய்யப்படாதவர்கள் போட்டித் தேர்வினை எழுத தகுதியற்றவர்கள் எனப்பட்டது. எனவே இந்த முறையானது, நியமனம் மற்றும் போட்டித் தேர்வுமுறை என்றழைக்கப்பட்டது.

திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது 1853 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை 1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது.

போட்டித் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது 23 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1858ஆம் ஆண்டு ஹெய்லிபரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி அகற்றப்பட்டது.

மேலும் குடிமை பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குடிமைப்பணியாளர் தேர்வாணையம் வசமானது. 1860ஆம் ஆண்டு ஒரு ஒழுங்கு முறை ஆணையின் மூலம் தேர்வெழுத அதிகபட்ச வயது 22ஆக குறைக்கப்பட்டது. மேலும் 1866ல் 21 ஆகவும் 1876ல் 19ஆக குறைக்கப்பட்டது.

1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய ஆட்சிப் பணி சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் சில உயர் நிர்வாக பதவிகள் மற்றும் நீதித்துறை பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய ஒதுக்கீடு செய்திருந்தது.

பின்னர் இப்பதவிகள் இந்திய ஆட்சிப் பணிகளாக மாற்றப்பட்டன. வயது வரம்பு குறைப்பு மற்றும் இலண்டனுக்கு சென்று தேர்வு எழுதுதல் ஆகிய காரணங்களால் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வை எழுதக் கூடிய சூழ்நிலை நிலவியது.

1869ல் சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத், மற்றும் பிகாரி லால் குப்தா ஆகிய மூன்று இந்தியர்கள் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனர்.

பின்னர் ஐசிஎஸ் தேர்விற்கான வயது வரம்பை உயர்த்தவும் தேர்வினை இந்தியாவிலேயே நடத்தவும் கம்பெனியிடம் இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்விளைவாக 1892ல் குறைந்தபட்ச வயதினை 21ல் இருந்து 23ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் 1912ல் அரசு பணியைப்பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் ஒரு அரச ஆணையம் (ராயல் கமிஷன்) நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்களாக இந்தியர்களான கோபால கிருஷ்ண கோகலே , சர் அப்துர் ரஹிம் மற்றும் நான்கு ஆங்கிலேயர்களும் இடம் பெற்றிருந்தனர்.

1917ல் இவ்வாணையம் தனது பரிந்துரையை வெளியிட்டது. அப்பரிந்துரைகள் இந்தியர்களின் கோரிக்கையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாக இருந்தது மட்டுமல்லாமல் குடிமை பணி தேர்வை இந்திய மயமாக்கியது.

1918ல் இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், படிப்படியாக இவற்றை ஆதிகரிக்கவும் மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு ஆகியோர் பரிந்துரைத்தனர்.

1923ல் ஏற்படுத்தப்பட்ட மற்றொரு (ராயல் கமிஷன்) அரச ஆணையத்திற்கு லீ பிரபு தலைவராக நியமிக்கப்பட்டார். இது இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய காடுகள் பணி ஆனிய அனைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அரசு பணியார் தேர்வாணையம் ஒன்றை உடனடியாக நிறுவுவதற்கும் லீ தலைமையிலான குழுபரிந்துரை செய்தது.

1935ஆம் ஆண்டு இந்திய கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும், மாகாளங்களில்-மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவல செய்தது.

அதேபோல் ஒரு சில மாகாணங்கள் ஒன்றிணைந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கவும் வழிவகை செய்தது.

ஆங்கிலேயருக்கு உதவி செய்யவே இந்த குடிமைப்பணி அமைப்பு உருவாக்கப்பட்டாலும் , சுதந்திர இந்தியாவின் இந்திய ஆட்சிப் பணிஅமைப்பு உருவாவதற்கு இந்தமுறை அடித்தளமாக அமைந்தது.

1863ல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர். இவர் கவிஞர் இரபீந்தநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.

இராணுவம்

இது இந்தியாவின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் இரண்டாவது முக்கிய தூணாக விளங்கியது.

கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ந்தது, அதற்கு சிப்பாய் இராணுவம் என்று பெயர். இந்த இராணுவ வீரர்களுக்கு, ஐரோப்பிய அதிகாரிகளின் உத்தரவை போர்க்களத்தில் நிறைவேற்ற, ஐரோப்பிய இராணுவத்திற்கு இணையாக பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆரம்ப காலத்தில் வங்காளம், பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று படைப்பிரிவை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்தியாவில் ஆங்கிலேட ஆட்சியினை நிறுவுவதிலும், விருவுபடுத்துவதிலும் இராணுவத்தின் பங்களிப்பு சிறப்பானதாகும். ஆங்கில சிப்பாய்களை விட இந்திய சிப்பாய்களுக்கு குறைந்த சம்பளமும், தினப்படியும் வழங்கப்பட்டது.

உதாரணமாக 1856ஆம் ஆண்டு மூன்று இந்திய படைவீரர்கள் மாத சம்பளமாக மொத்தம் ரூ.300 மட்டுமே பெற்றனர்.

1857ஆம் ஆண்டு கம்பெனி இராணுவம் 86% இந்தியர்களைக் கொண்டதாக இருந்தது. இருந்தபோதிலும் இராணுவ உயர் பதவி அனைத்தும் ஆங்கிலேயர் வசமே இருந்தன. இந்தியர்களுக்கான உயர் பதவி சுபேதார் மட்டுமே ஆகும்.

ஆங்கில இராணுவத்தின் வலிமை:

பிளாசிப்போர் 1757. ஐரோப்பிய காலாட்படை – 1950, ஐரோப்பிய பீரங்கிப்படை – 100, ஆங்கிலேய மாலுமிகள் – 50, இந்திய சிப்பாய்கள் – 2100, வங்காளத்தில் இருந்த ஆங்கில இராணுவம் – 6000.

1857ல் இந்திய இராணுவத்தில் 3,11,400 வீரர்களில் 2,65,900 வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர். உயர் பதவி அலுவலர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள் ஆவர்.

காவல் துறை

1765ல் வங்காளத்தில் திவானி (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்ற போது ‘சர்க்கார்’ (கிராம மாவட்டங்கள்) என்ற ஆட்சிப் பிரிவுக்கு பொறுப்பு வகித்த பௌஜ்தார் வசம் முகலாய காவல்துறை சென்றது. அப்போது, நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்களாக கொத்வால் இருந்தார்.


அதேவேளையில் கிராமங்கள் கிராம காவலாளிகளால் பாதுகாக்கப்பட்டது அவர்களை ஜமீன்தார்கள் சம்பளம் வழங்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்தியாவில் முதன்முதலில் கவல் துறையை உருவாக்கியவர் காரன்வாலிஸ் பிரபு ஆவார். ஜமீன்தர்களை காவல் பணிகளிலிருந்து விடுவித்த காரன்வாலிஸ் 1791ல் முறையான காவல் துறையை உருவாக்கினார். அவர் ‘தரோகா’ என்பவரை தலைவராகக் கொண்ட சரகங்கள் அல்லது ‘தானாக்கள்’ என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தினார்.

அவர்கள் கிராமங்களிலும் காவல் பணி செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் ‘சௌகிதார்கள்’ என்றழைக்கப்பட்டனர்.

பெரு நகரங்களில் பழைய முறையான கொத்வால் காவல் பணியே தொடர்ந்தது. மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தரோகா நியமிக்கப்பட்டார். இந்த தரோகா முறையால் மதராஸ் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்குவதற்கு முன்னர் அனைத்து தானாக்களும் மாவட்ட நீதிபதியின் பொது மேற்பார்வையில் இருந்தது. அதன் பின் 1808 ல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார்.

பின்னர் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் துறையில் முக்கிய பணியானது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சதி செய்வதை தடுத்தலும், குற்றங்களை கையாள்வதும் ஆகும்.

நீதித்துறை அமைப்பு


1772ல் இரட்டைஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது. அதன் விளைவாக சிவில் நீதிமன்ற என்றழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பௌஜ்தாரி அதாலத் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.

1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்நீதிமன்றத்திற்கு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷ் மன்னர் நியமித்தார்.


இந்நீதிமன்றம் சிவில், குற்றவியல், திருச்சபை மற்றும் பிரத்தியோக வழக்குகளை விசாரித்தது.

கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாதிரியில் 1801ல் மதராஸிலும், 1823ல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.

1832ல் வில்லியம் பெண்டிங் பிரபு ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டு வந்தார்.

சட்டங்களை தொகுக்க இந்திய சட்ட ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

1861ஆம் ஆண்டு இந்திய உயர்நீதி மன்ற சட்டத்தின்படி கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

வங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார்.

துணைப்படைத் திட்டம் (1798)

இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை அங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத்திட்டமாகும்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.

சுதேச அரசுகள் பாதுகாக்கப்பட்ட அரசுகள் என்றழைக்கப்பட்டது. அவ்வரசுகள் மீது ‘தலையாய அதிகாரம்’ செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர்.

படையெடுப்புகளிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை என்ற நிலை உருவானது.

துணைப்படைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கிலேயரின் படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்


ஆங்கிலேயரின் படையை பராமரிக்கவும், படை வீரர்களின் ஆண்டுச் சம்பளம் வழங்குவதற்காகவும், நிரந்தரமாக சில பகுதிகளை அந்நாட்டு அரசர் ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டும்.

ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பிய அலுவலர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

சுதேச நாட்டு அரசர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதி பெற்ற பின்னரே அயல் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அந்நிய அரசுகளின் தாக்குதல் மற்றும் உள்நாட்டுக் கலவரம் நடைபெறும்போது ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி அந்நாட்டை பாதுகாக்கும்.

ஆங்கிலேயருக்கு கிடைத்த நன்மைகள்

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, இந்திய சுதேச அரசர்களின் செலவிலேயே தன்னுடைய படையை பராமரித்தது.


சுதேச அரசர்களிடம் பணியில் இருந்த அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் நீக்கப்பட்டனர். பிரெஞ்சுக்காரகள் இந்தியாவில் மீண்டும் எழுச்சி பெறும் அபாயம் முற்றிலும் நீங்கியது.

கம்பெனி, சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

வெல்லெஸ்லி பிரபுவின் இந்த இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது. இவர் ‘இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு’ என்பதை ‘இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு’ என்று மாற்றினார்.

சுதேச அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்புகள்


துணைப்படைத் திட்டம் இந்திய சுதேச அரசர்களை பலவீனமானவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் மாற்றியது.

பிரிட்டிஷ் கம்பெனியால் பாதுகாக்கப்பட்ட அரசர்கள் தங்கள் குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து, அவர்களை சுரண்டினர்.

துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் நாடு ஹைதராபாத் (1798). அதனை தொடர்ந்து ஏற்றுக்கொண்ட இண்ந்திய அரசுகள் தஞ்சாவூர் (1799), அயோத்தி (1801), பேஷ்வா (1802), போன்ஸ்லே(1803), குவாலியர் (1804), இந்தூர் (1817), ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர்(1818).

வாரிசு இழப்புக் கொள்கை (1848)

டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தார். அவர் ஓர் ஏகாதிபத்தியவாதி ஆவார்.

ஆங்கிலேயெ பேரரசை விரிவுபடுத்துவதற்கா அவர் வாரிசு இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை கொண்டு வந்தார்.

1848ஆம் ஆண்டு அவர் அறிவித்த இக்கொள்கையின்படி, சுதேச மன்னர்கள் ஆங்கிலேயரின் அனுமதி ஒன்றி வாரிசுகளை தத்தெடுக்க நேரிடும் போது, மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும், மன்னரின் ஆட்சிப்பகுதி ஆங்கிலேயரின் தலையாய சக்திக்கும் செல்ல நேர்ரிடும் எனப்பட்டது.

இக்கொள்கையினை இந்தியர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு இக்கொள்கை முக்கிய காரணமாக அமைந்தது.

வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள்: சதாரா (1848), ஜெய்த்பூர் , சம்பல்பூர் (1849), பகத் (1850), உதய்பூர் (1852), ஜான்சி (1853) மற்றும் நாக்பூர் (1854)

இந்தியா ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

மிகப்பெரிய கடல் வலிமை

நெசவுத் தொழில் வளர்ச்சி

அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆங்கிலேயரின் திறமைமிக்க இராஜதந்திரம்.

இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை உணர்வுகள்

இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை.

முடிவுரை

  • பிளாசிப்போர் இந்தியாவில் ஆங்கிலேய அட்சிக்கு அடித்தளம் அமைத்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. இது ஏகாதிபத்திய, விரிவாக்க, மற்றும் சுரண்டல் கொள்கையை கொண்டிருந்தது. இக்கம்பெனி துணைப்படைத் திட்டத்தின் மூலமும், வாரிசு இழப்புக் கொள்கை மூலமும், வாரிசு இழப்புக் கொள்கை மூலமும் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேய ஆதிகத்தின் கீழ் கொண்டு வந்தது. இக்கொள்கைகள் 1800-01 ஆம் ஆண்டு தென்னிந்திய கலத்திற்கும் , 1806ஆம் ஆண்டு வேலூர் கலத்திற்கும், 1857ஆம் ஆண்டு பெரும்புரட்சிக்கும் இட்டுச் சென்றது.

Share:

0 Comments:

Post a Comment