> TNPSC பொதுத்தமிழ் – இலக்கிய வகைச் சொற்கள் ~ Kalvikavi - Educational Website - Question Paper

TNPSC பொதுத்தமிழ் – இலக்கிய வகைச் சொற்கள்

TNPSC பொதுத்தமிழ் – இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்

  • இயற்சொல்
  • திரிச்சொல்
  • திசைச்சொல்
  • வடசொல்

இயற்சொல்:

கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

இயற்சொல் – இயல்பான சொல்.

எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ

இயற்சொல் இரு வகைப்படும்.

1) பெயர் இயற்சொல்

2) வினை இயற்சொல்

1) பெயர் இயற்சொல்:

எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.

(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை

2) வினை இயற்சொல்:

எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல் எனப்படுமு;.

(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.

திரிசொல்:

இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள் என்று கூறுவர்.

(எ.கா) பீலி – மயில்தொகை

உகிர் – நகம்

ஆழி – கடல்

தத்தை – கிளி

புனல் – நீர்;

ஞாலம் – உலகம்

திரிசொல் இரு வகைப்படும்

1) பெயர்த்திரிசொல்

2) வினைத் திரிசொல்

1) பெயர்த்திரிசொல்:

எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.

(எ.கா) எயில் – மதில்

நல்குரவு – வறுமை

கழை – மூங்கில்

கிழமை – உரிமை

மடி – சோம்பல்

பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.

i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்

ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்

ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:

கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.

எ.கா:

வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.

பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:

ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.

எ.கா:

ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்

2) வினைத்திரிசொல்:

கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.

எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.

வினைத்திரிசொல் இரு வகைப்படும்.

i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்

ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்

ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:

செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:

வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.


திசைச்சொல்:

வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்

i. கேணி – (கிணறு)

ii. பெற்றம் – (பசு)

iii. அச்சன் – (தந்தை)

iv. கடிதாசி – (கடிதம்)

v. தள்ளை – (தாய்)

vi. சாவி – (திறவு கோல்)

vii.அசல் – (மூலம்)

viii. கோர்ட் – (நீதிமன்றம்)

ix.இலாகா – (துறை)

வடசொல்:

வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்” எனப்படும்.

கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.

எ.கா: கமலம் – தாமரை

விஷம் (அ) விடம் – நஞ்சு

புஷ்பம் (புட்பம்) – மலர்

அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்

சுதந்திரம் – விடுதலை

விவாகம் – திருமணம்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts