7th Tamil Term 3 Chapter 3.4 பயணம்
மதிப்பீடு
1.‘பயணம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
- பெங்களூரில் அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதாசிரியர் தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் செல்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு. தன் நண்பர்களுடன் ஐந்தாறு மாதத்திற்கொருமுறை கிருஷ்ணராஜ் சாகர் அணைக்குச் செல்வார். ஒருமுறை மகாபலிபுரம் கூட சென்றுள்ளார்.
- ஹாசன் வழியாக மங்களூரு செல்ல வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் ஒருமுறை புறப்பட்டார். இரு நாட்களில் ஹாசன் வந்து சேர்ந்தார். பகலில் வெப்பமும் இரவில் கடும் மழையும் பெய்தது. அதனால் மறுநாள் பயணம் செய்தார்.
- சக்லேஷ்பூர்வரைக்கும் சிறு சிறு தூறலில் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார். மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஒட்டுகிற கருவிகளும் காற்றடிக்கும் கருவியும் இல்லாததால் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டே நடந்தார்
- மழையின் வேகத்தையும் மீறி ஒரு குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. குரல் வந்த திசையில் இருந்த குடிசைக்குச் சென்றார். அங்கிருந்த சிறுவன் ஒரு துண்டு கொண்டு வந்து தந்தான். தன் அம்மாவிடம் அம்மா பாவம்மா இவரு” என்று கூறிவிட்டு அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தான். மிதிவண்டியில் பெங்களூருவில் இருந்து வந்ததையும், கன்னியாகுமரிக்கு மிதிவண்டியில் போயிருந்ததையும் அவர் சொல்லக் கேட்டு வியந்தான்.
- டில்லிக்கு , இமயமலைக்கு மிதிவண்டியில் செல்ல முடியுமா என்று கேட்டான். செல்ல முடியும் அவர் கூறினார். அச்சிறுவன் எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை. ஆனா அம்மா வாங்கித் தரமாட்றாங்க” என்று ஏக்கத்துடன் கூறினான். அவர் அவனிடம் “நீ பெரியவனானதும் வாங்கித் தருவார்கள்’ என்று சமாதானப்படுத்தினார். இரவு தூங்கும்போது அவனுடைய மிதிவண்டிப் பயிற்சியைப் பற்றிச் சொன்னான். தன்னுடைய பயண அனுபவங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டார்.
- மறுநாள் காலை மிதிவண்டியைச் சரி செய்த பின்னர் அச்சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான். முதலில் தட்டுத் தடுமாறி ஓட்டினான். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஓட்டிவிட்டு வீடு திரும்பினர். அவனுடைய அம்மா கொடுத்த அவலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மழை வந்துவிட்டது. மழைநின்றதும் புறப்பட்டார். ஆனால் அச்சிறுவன் கேட்டுக் கொண்டதால் அவனுக்கு மிதிவண்டியைக் கொடுத்து ஓட்டச் செய்தார். விட்டு விட்டு மழை பெய்ததால் இரவு அங்கேயே தங்கிவிட்டார். இரவு முழுவதும் அவருடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். விடிந்ததும் அவன் அவருடன் செல்வதற்கு அனுமதி கேட்டான். அவர் சரி என்றார். அவனுடைய அம்மாவும் இசைந்தார்.
- அங்கிருந்து புறப்படும்போது, அவர்களுக்குப் பணம் தரலாம் என்று எண்ணினார். ஆனால் கொடுக்காமல் மனதில் ஊமை வலியுடன் புறப்பட்டார். அச்சிறுவனைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார். சிறுவன் மிதிவண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று திரும்பினான். பிறகு பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் உணவகத்தில் சாப்பிட்டனர்.
- அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. வாகனங்கள், மனித நடமாட்டம் அவருடைய மனதைக் கிளர்ச்சியடைய செய்தது. அச்சிறுவன், “இன்னும் கொஞ்ச தாரம்தான் எங்க மாமா வீடு. அது வரைக்கும் நானே மிதிவண்டியில் போய் வரட்டா? கொஞ்ச நேரம் அவங்க மிதிவண்டியைத் தொட்டுட்டா என்னா கத்து கத்துவாங்க தெரியுமா? இப்ப அவங்க முன்னால நான் போய் எறங்கினதுமே அதிசயப்படுவாங்க. அதுவரைக்கும் போய் வரட்டா?” என்று கேட்டான். அவரும் சரி என்றார். அவனும் மிதிவண்டியில் பாய்ந்து விட்டான். அவர் தேநீர் குடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தார்.
- சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆட்டோக்கள், லாரிகள் என வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள் அவர் சட்டென் அச்சிறுவனைப்பற்றியோசித்தார். அச்சிறுவனுடைய குடும்பம், அவன் ஆசை , அவன் வேகம் எல்லாம் அவர் மனதில் அலைமோதின. தெருமூ லை வரைக்கும் பார்த்தார். அவன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. எதிர்பாராத விதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்து விட்டார். வண்டியும் உடனே கிளம்பி விட்டது.
கற்பவை கற்றபின்
1.நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : என்னடா கணேஷ் நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை? உடல் நிலை சரியில்லையா?
மாணவன் 2 : நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அரையாண்டு விடுமுறை என்பதால் என்னுடைய அப்பா எங்களைக் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றார். நேற்று இரவுதான் வந்தோம். நான்கைந்து நாட்கள் இரயிலிலும், மகிழுந்திலும் சென்றது களைப்பாக இருந்தது. அதுதான் வரவில்லை
மாணவன் 1: அப்படியா? கன்னியாகுமரியில் என்னவெல்லாம் பார்த்தாய்?
மாணவன் 2: முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். அக்கோவில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது. அன்னையின் மூக்கில் உள்ள மூக்குத்தி இரத்தினக் கல்லால் ஆனது. அதன் ஒளியைப் பார்த்து அனைவரும் வியந்து போனோம்.
மாணவன் 1: அப்படியா? அதற்கடுத்து எங்கு சென்றீர்கள்?
மாணவன் 2 : பிறகு கடற்கரையில் மெதுவாக நடந்து சென்று கடலலைகளின் ஆரவாரத்தைக் கண்டு மகிழ்ந்தோம். நானும் என் தங்கையும் கடல் நீரில் இறங்கி குளித்தோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
மாணவன் 1: எனக்குக் கூட கடற்கரைக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். ஆமாம் கன்னியாகுமரியில் முக்கடல் சேரும் என்று சொல்வார்களே?
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கின்றன. இந்த இடத்தினை குமரிமுனை என்பார்கள்.
மாணவன் 1: கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
மாணவன் 2 : அங்கு பதினாறு தூண்களைக் கொண்ட சிறப்புமிக்க நீராடுதுறை இருந்தது. அங்கு கருமணல், செம்மணல், வெண்மணல் முதலிய மூன்று நிற மணல்களுடம் வேற்றுமையின்றி விரவிக் கிடந்தன. நாங்கள் முழு நிலவு நாளில் சென்றிருந்ததால் சூரியனையும் சந்திரனையும் எதிரெதிர் திசையில் கண்டோம். இக்காட்சி வேறெங்கும் பார்க்க இயலாது.
மாணவன் 1: நான்கூட கேள்விப்பட்டிருக்கிறேன்.
மாணவன் 2: காந்தி நினைவாலயம் சென்றோம். அங்கு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளன்று சூரியனின் கதிர்கள் அவரது
அஸ்திக்கலசம் வைக்கப்பட்ட மேடை மீது விழும் என்று கூறினார்கள்.
மாணவன் 1: வியப்பாக உள்ளதே!
மாணவன் 2: எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது. அதன்பிறகு கடற்கரையில் இருந்து
சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றோம். படகில் சென்ற அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.
மாணவன் 1 : நீ கூறியதைக் கேட்டதும் நானே கன்னியாகுமரிக்குச் சென்று வந்தது போல் உள்ளது.
மாணவன் 2: சரிடா. நான் உன்னைப் பார்க்க வந்ததே வீட்டுப்பாடங்கள் என்னென்ன உள்ளது என்பதைக் கேட்கத்தான் வந்தேன். சீக்கிரம் சொல், நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
மாணவன் 1: இன்று வீட்டுப்பாடம் ஏதும் கொடுக்கவில்லை.
மாணவன் 2: நல்லதாப் போச்சு. எனக்கும் ஓய்வெடுக்க நேரம் கிடைத்தது. நான் சென்று
வருகிறேன்.
2.நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக.
Answer:
நான் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் :
முதலில் விமானத்தில் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்வேன்.
செல்லவிருக்கும் ஊரின் தட்பவெப்ப நிலைக்கேற்றபடி உடைகளை எடுத்து வைப்பேன்.
எத்தனை நாட்கள் தங்கவிருக்கிறேனோ அத்தனை உடைகளை எடுத்து வைத்துக் கொள்வேன்.
நான் தங்கும் இடத்தில் துணி துவைத்துப் போடும் வசதி இருந்தால் குறைவான எண்ணிக்கையில் ஆடையை எடுத்து வைப்பேன்.
தேவையான சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்றவற்றை எடுத்து வைப்பேன்.
முதலுதவிக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்து வைப்பேன்.
அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வைப்பேன்.
0 Comments:
Post a Comment