தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி, மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை பார்த்து வருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் பள்ளிகளில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளி தேர்வுகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பேரலை சூழலுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த 1ம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட ஒன்றரை வருட காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குமான பொது தேர்வுகளும் கூட ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் துவங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 4 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கனமழை காரணமாகவும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு நேரடி கல்வி இன்னும் முறையாக கொடுக்கப்படாத பட்சத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறும் என்கிற குழப்பங்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு மட்டும் மேற்கொள்ளப்படும். இதனுடன் அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணி செய்து வருபவர்களுக்கும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும்’ என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment