> பண்டைய கால கல்விமுறை - நவீன கால கல்விமுறை - கட்டுரை ~ Kalvikavi - Educational Website - Question Paper

பண்டைய கால கல்விமுறை - நவீன கால கல்விமுறை - கட்டுரை

பண்டைய கால கல்விமுறை - நவீன கால கல்விமுறை 

பண்டைய காலத்தில், ஏன் ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முந்தைய அண்மைக்காலம் வரை, தற்போது முறைசாராக் கல்வி என்று அழைக்கப்படும் குருகுல வழிக்கல்வி முறையே இந்திய சமூகத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிந்து போய்விட்ட இம்முறை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் இன்று பலர் மறந்து போய் விட்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

குருகுலம் என்றால் என்ன?

ஏதாவது ஒரு கலையை அல்லது கல்வியைப் பயில விரும்பும் மாணவன் ஒருவன், முதலில் ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து அவரை அணுகுவான். அவரும் அவன் உண்மையில் கற்பதற்கு ஆர்வமாக உள்ளானா, அக்கல்வியைக் கற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளதா என்பன போன்றவற்றை அறிவதற்கு சில சோதனைகளை வைத்து அதில் அவன் தேர்வு பெற்றுவிட்டால் அவனைத் தனது குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார். அவனும் குருவுடனேயே தங்கியிருந்து அக் கலையை/கல்வியை பயில்வது தான் குருகுலக் கல்விமுறை.

குருகுல கல்வி சிறப்பியல்புகள் ?

அங்கே கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற ஒழுங்கு முறைகள் மாணவன் பயிலும் கலைக்கு மேலதிகமாகக் கற்பிக்கப் பட்டது. காலை எழுந்து காலைக் கடன்கள் மற்றும் யோகப்பயிற்சி முடித்து விட்டு குளித்தலில் இருந்து குருவுக்குத் தேவையான தொண்டுகள் முதற்கொண்டு அவனுக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல் மூலம் அங்கே ‘கடமை’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது.

குருகுலத்தில் வயதில் கூடிய பெரியோர்களை மதித்து நடத்தல்; சக மாணவர்களுடன் ஆரோக்கியமான போட்டிகளில் மட்டுமே ஈடுபடல்; எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நாவடக்கம் பேணுதல் போன்றவற்றின் மூலம் அங்கே ‘கண்ணியம்’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது

குருகுலத்தில் பல சட்டதிட்டங்கள் இருக்கும்; அது மாணவனுக்கு குருவால் அறிவுறுத்தப் பட்டிருக்கும்; உதாரணமாக சில குறிப்பிட்ட கட்டளைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும்; உதாரணமாக வாய்ப்பாட்டு, நடனப் பயிற்சிகள் இளவெய்யில் முடியுமுன் முடிந்துவிடும்; அப்போதுதான் குரல்வளம், உடல் வளம் சிறக்கும். இது போன்ற சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலம் ‘கட்டுப்பாடு’ என்றால் என்ன என்பதும் கற்பிக்கப்பட்டது.

இந்த மூன்றையும் (கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு) தான் பயிலும் கலைக்கு மேலதிகமாக பயின்று குருகுலத்தில் இருந்து வெளிவரும் நல்ல நடத்தையுள்ள மாணவனே நாட்டிற்கு நல்லதொரு குடிமகனாகவும் வீட்டிற்குப் பயனுள்ளவனாகவும் இருந்தான் என்பது வரலாறு காட்டும் உண்மை.

குடியேற்ற நாடுகளில் தங்கள் நிர்வாகம் செய்ய இங்கிலாந்தில் இருந்து அலுவலர்களைக் கொண்டு வந்தனர். அது சுரண்டிய பொருளாதாரத்தில் கணிசமான பகுதியை உறிஞ்சியது. ஆக, அடிநிலை, இடைநிலை நிர்வாகத்திற்குத் தேவையான அலுவலர்களை உள்ளூரில் உருவாக்கினர். கணிதம், ஆங்கிலத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை மிசனரி பாடசாலைகளில் புகுத்தினர். கற்றுத் தேறியவர்களுக்குச் சான்றிதழ் கிடைத்தது. கூடவே வேலையும் கிடைத்தது. படிப்பு முடிய சான்றிதழ் கிடைக்கும் வகையிலான தமது கல்வி முறையில் படித்து முடித்தவர்களுக்கே வேலை என்பதை நடைமுறைப்படுத்தியதன் மூலம் குருகுலக் கல்விமுறை மெல்ல மெல்ல தளர்ந்து, நலிந்து, ஒழிந்தது. தமது கல்விக்கு, கல்விமுறைக்கு முற்றிலுமாக எம்மை அடிமைப் படுத்திக் கொண்டார்கள் புத்திசாலிகளான ஆங்கிலேயர்கள். இப்படித்தான் இந்தியர்கள், ஆங்கிலக் கல்விமுறைக்கு அடிமையாகி அவர்களின் நடை-உடை-பாவனைகளுக்கு அடிமையாகி இறுதியில் ஆங்கிலேயர்களுக்கே அடிமையான கதை. அந்த அடிமைத்தனம் இன்றும் தொடர்வதுதான் வேதனையான சோதனை. ஆம் ஆங்கிலேயர் உட்பட்ட பல்வேறு வேற்றுமொழி ஆக்கிரமிப்பாளர்களால் பல்வேறு காலகட்டங்களில் இந்தியர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களிடம் அடங்கி அடங்கி ஒரு அடிமைத்தனம் தமிழர்களுக்கு நிரந்தரமாகவே வந்துவிட்டது!

இன்றைய கல்வி :

ஆங்கிலேயரின் கல்வியில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பனவற்றிற்கு தற்போது பார்க்கப் போனால் துளியளவும் இடம் இல்லையென்று சொன்னாலும் பொருந்தும். வேண்டுமானால் இங்கு பல்கலையில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களையோ பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையோ மாணவர்களின் நடத்தையைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்; நாம் சொல்லும் உண்மை புரியும்! கற்பிக்கப்படும் நேரத்தில் சகமாணவனுடன் பேசுதல்; உணவு உண்ணல்; எழுந்து வெளியே செல்லுதல்; ஆசிரியரை மதித்து நடக்காமை; குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்றன இதற்கு சில உதாரணங்களாகும். இதற்கு மேலதிக உதாரணமாக மேற்கத்தியக் கல்விமுறையில் பயின்று வெளிவந்த எமது தமிழ்ப் பிள்ளைகளைப் பாருங்கள்; அவர்களில் எத்தனை பேருக்கு கடமை-கண்ணியம் கட்டுப்பாடு என்பன இருக்கிறது? இருந்தால் எவ்வளவு வீதம் இருக்கிறது என்று சோதித்துப் பாருங்கள்; மேற்கத்தியக் கல்விமுறையின் வண்டவாளங்கள் தெரியும். மாணவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரியோர்களை கனம் பண்ணுதல், நாவடக்கம், ஆரோக்கியமான போட்டி, பண்பாக நடந்து கொள்ளுதல் போன்ற நன்நடத்தை இல்லாவிட்டால் அம்மாணவனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் ஏன் உலகிற்கும் என்ன பயன்?

தவிர இன்றைய கல்விமுறையில் படித்து வெளிவந்த மாணவர்கள் வேலைக்கு முயற்சி செய்யும்போது, அவர்களிடம் என்ன KASH (K-Knowledge, A-Attitude, S-Skill, H-Habit) இருக்கிறது என்பதை வைத்துத்தான், அவர்களுக்கு வேலை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று வேலைவாய்ப்பு நிறுவனங்களால் தீர்மானிக்கப் படுகிறது. இது தெரிந்துதானே எமது குருகுல முறையில் கலைக்கு/கல்விக்கு மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மற்றும் மேலும் பல விடயங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போதைய கல்வி முறையில் இவை சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. மாணவன் வேறு விதமாகக் கற்றுக் கொண்டால் ஒழிய அம்மாணவனிடம் இவை இருக்கக் காரணமில்லை.

 ஆக, தற்போது கல்வி என்பதே வியாபாரமாக ஆகிப் போய் விட்ட நிலையில், மீண்டும் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், குறைந்தது இந்தியர்களான எமது பிள்ளைகள் நன்நடத்தை பயின்று நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை எமது தாய்நாட்டு அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஆனால் அரசியலால் சீரழிந்து போயுள்ள எமது நாடுகளின் அரசாங்கங்கள் தமது மற்றைய கடமைகளையே சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் இருக்கும் போது அவர்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனாலும் எமது நாடுகளில் இன்றும் பணபலம் கொண்ட தனிப்பட்ட சிலர் இம்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் குருகுல வாசக்கல்வி முறை நடைமுறைப் படுத்த முடியாது என்றாலும் அது போன்ற ஒன்றை விடுமுறைக்காலங்களில் மட்டுமாவது எமது சிறார்களுக்கு நடைமுறைப் படுத்தலாமே! உதாரணமாக வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ‘தமிழ்ப்பாடசாலை’ என்ற, தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் வகுப்புக்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இவை பொதுவாக சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை விட மாதம் ஒருமுறை மற்றும் முடிந்தால் பாடசாலை விடுமுறைகளிலும், பெரியவர்களின் வழிநடத்தலின் கீழ், குருகுலம் போன்றதொரு கல்வி முறையை நடத்தி, அங்கே தமிழ் மற்றும் இந்த்திய கலாச்சார கற்பித்தலும் மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற நன்நடத்தைக்கு உதவும் பல்வேறு விடயங்களையும் கற்பிக்கலாம் தானே?

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts