பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்த வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குக்கட்டுபாட்டை பராமரிப்பதிலும் பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும் , செம்மையாகவும் நடைபெறவும் , பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் விவரம் :
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஆசிரியர் மற்றைய ஆசிரியர்களை விட மிக முக்கியமான ஆசிரியர்.
தலைமையாசிரியருக்கு அடுத்தபடியாக பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கு , உடல்நலம் , லை எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பணிசெய்யக்கூடிய அளவுக்கு தயார் செய்தல் , மூளைத்திறன் உடற்திறன்களை வளர்த்தல் , தலைமைப்பண்பினை வளர்த்தல் , மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறனை வளர்த்தல் போன்ற மிக முக்கிய பணிகள் உடற்கல்வி ஆசிரியரே செய்ய முடியும்.
மேலும் தலைமையாசிரியருக்கும் ஏனைய பிற ஆசிரியர்களின் நல்ல உறவுக்குப் பாலமாக செயல்படக் கூடியவர் உடற்கல்வி ஆசிரியர்.
1. மாணவ மாணவியர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளி சீருடையில் பள்ளி காலை வழிபாட்டிற்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
2. பள்ளியின் காலை வழிப்பாட்டுக் கூட்டத்தை தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து ஒழுங்குபடுத்தி வழிபாடு நல்லமுறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் முன்நின்று எளிய நடைமுறையில் ஆரம்பித்து யோகா பயிற்சியுடன் ( தியானம் ) முடிக்க வேண்டும்.
3. பள்ளிப்பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் , விளையாட்டு மைதானத்தில் மற்றும் பிற இடங்களில் விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணாக்கர்களை கண்டிப்புடன் கண்காணித்து வகுப்பிற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. தலைமையாசிரியர் தயாரித்து வழங்கும் பாடவேளை அட்டவணைப்படி , வகுப்பிற்கு ஒரு வாரத்திற்கு இரண்டு பாடவேளை உடற்கல்வி வகுப்புகள் நடத்திட வேண்டும்.
5.உடற்கல்வி பாடவேளையில் மாணவர்களுக்கு உடல்சூடேற்றும் பயிற்சிகள் , யோகா , லெஸ்ஸிம் , டம்பள்ஸ் போன்ற சிறப்புப் பயிற்சிகளை கற்றுத்தர வேண்டும்.
6. மாணவர்களை உற்சாகப்படுத்த விதவிதமான உற்சாகமூட்டும் விளையாட்டுக்களைக் சொல்லித்தருவதோடு , அந்த விளையாட்டுக்கள் மூலம் , இணைந்து செயல்படுதல் , மூளைத்திறனைப் பயன்படுத்துதல் , மனம் உற்சாகத்தோடு இருக்கவாறு , ஊக்கத்தோடு இருப்பது போன்ற பண்புகளைச் சொல்லித் தரவேண்டும் . மூத்தோருக்குக் கீழ்படிதல் , விதிகளின்படி விளையாடுதல் , சக மாணவர்களுடன் இணைந்து நட்பாக விளையாடுதல் போன்ற பண்புகளையும் சொல்லித்தர வேண்டும்.
7. பள்ளி மாணவர்களுக்கு குழுவிளையாட்டுக்கள் , தடகள விளையாட்டுப் போட்டிகள் , கேரம் , செஸ் , வளையப் பந்து போன்ற விளையாட்டுகளுக்கு குறுவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்காண் விளையாட்டுகளில் திறமையுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை குறுவட்ட அளவிளான போட்டிகளில் பங்களிக்க வைக்கவும் அதற்கான சிறப்புப் பயிற்சிகளையும் காலையில் மாலையில் தினந்தோறும் வழங்கவேண்டும். அவர்கள் குறுவட்ட அளவில் வென்று வருவாய் மாவட்டம் மாநில அளவில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியும் ஊக்கமும் உற்சாகமும் அளித்திட வேண்டும்.
8. உடற்கல்வி பாடவேளையில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ / மாணவியருக்கும் அணிநடை பயிற்சியினைக் கற்று கொடுக்க வேண்டும்.
9. வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் 45 நிமிடங்கள் பள்ளியில் அனைத்து மாணாக்கர்களுக்கும் ( 6 முதல் 12 ஆம் வகுப்புவரை ) அனைத்து ஆசிரியர்களின் உதவியோடு கூட்டுப்பயிற்சி ( MASS DRILI ) கொடுக்க வேண்டும்.
10. கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் உலக திறனாய்வு போட்டிகள் ( WOLRD BATTERY TEST ) நடத்தி தகுதி பெறும் மாணாக்கர்களின் பட்டியலை ஆகஸ்டு மாத இறுதிக்குள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
11. பள்ளிகளுக்கிடையே நடைபெறுகின்ற குறுவட்ட / மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணாக்கர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்று போட்டிகள் முடிவடைந்தபின் பள்ளி வளாகம் வரை பாதுகாப்பாக அழைத்து வந்து சேர்ப்பதும் அவர்களின் கடமையாகும்.
12. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணாக்கர்கள் விளையாட தேவையான உபகரணங்கள் தலைமையாசிரியரின் மூலம் வாங்கி முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
13. மாணவர்களின் விளையாட்டு திறன்களை பரிசோதித்து அதனைப் பதிவேட்டில் பதிவு செய்து தலைமையாசிரியரிடம் கையொப்பத்தோடு பராமரிக்க வேண்டும்
14. மாதம் ஒருமுறை பாடக்குறிப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும் . அப்பாடக்குறிப்பின்படி உடற்பயிற்சி அளித்திட வேண்டும்.
15. மாணாக்கர்களை கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே நான்கு அணிகளாக பிரித்து ஒவ்வொரு மாதமும் குழு போட்டிகள் நடத்தி பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.
16. காலை அல்லது மாலை வேளையில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
17. பள்ளிகளுக்கிடையே நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் ( குறுவட்ட , மாவட்ட , மாநில அளவிலான ) மாணாக்கர்களை கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும் . ( 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை )
18.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ , மாணவியருக்கு விளையாட்டு விழா தவறாமல் நடத்தி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்ட வேண்டும்.
19. பள்ளியின் நடைமுறைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலைமையாசிரியருடன் இருந்து செயல்பட்டு சுமூகமாக தீர்வு காண்பதும் உடற்கல்வி ஆசிரியரின் கடமையாகும்.
20. பள்ளி மாணாக்கர்களின் நலன் மற்றும் பள்ளியின் நலன் கருதி தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
21. பள்ளியில் தலைமையாசிரியரின் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணாக்கர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் :
1. மாதவாரி பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பேடுகள்
2. Games Skill Test Register ( Any Two Games )
3.உலக திறனாய்வு போட்டிகள் ( WORLD BATTIERY TEST - 6- 8 )
மாணவர்கள் திறன் பதிவேடு ( 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ) ( Lang Jup , High Jup , 50Mts Run , Shotput ) இவைகளில் ஏதேனும் இருதிறன்.
பள்ளியில் விளையாட்டு சாதனங்கள் தொடர்பாக இருக்க வேண்டிய பதிவேடுகள் :
1. பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பேடு .
2.இருப்புப் பதிவேடு .
3.விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பதிவேடு
4. பழுதடைந்த பொருட்களின் பதிவேடு.
5. ஏலப்பதிவேடு
6.விளையாட்டு விழா பதிவேடு
7. குறுவட்ட , மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றதற்கான பதிவேடு .
8. சாதனைப் பதிவேடு
9. மதிப்பெண் பதிவேடு
மேற்கண்ட அறிவுரைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கு காண்பித்து கையொப்பம் பெற்று கோப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் , இவ்வறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றி உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் சிறப்பாகவும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையிலும் செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்க வேண்டுமென்றும் அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையினை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறான நடவடிக்கைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தவறாமல் பின்பற்றுகிறார்களா என மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோரின் ஆய்வின் போதும் திடீர் பார்வையின் போதும் ஆய்வு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment