கட்டுரை எழுதுக : - உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்சென்று வந்த ̈நிகழ்வைக் கட்டுரையாக்குக, --------------
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
விடை:
முன்னுரை:
எங்கள் பகுதியான மதுரையில் அரசுப்பொருட்காட்சி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவை ஒட்டித் தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறைப் பிரிவு சார்பில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள்:
உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள் தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும், வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில் மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் கவர்ச்சிகரமான முறையில் வணிக நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து மக்கள் காணுமாறு செய்திருந்தனர்.
அரங்குகள் அமைப்பு:
இந்தப் பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்கள், 12 தமிழக அரசுத்துறை நிறுவனங்கள், 3 மத்திய அரசு நிறுவனங்கள் என மொத்தம் 42 அரசு அரங்குகள் அரசின் சாதனை நலத்திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. மேலும் 115 கடைகளும், 25 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற மக்கள், கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கலைநிகழ்ச்சிகள்:
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாங்கள் சென்றிருந்தபோது ஒரிசா, குஜராத், சிக்கிம், மிசோரம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இருந்தது. இது இந்த ஆண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.
விளையாட்டு அரங்குகள்:
இராட்சச ராட்டினம், குவளை இராட்டினம், மின்சாரத் தொடர்வண்டி, மரணக் கிணறு, மேஜிக்,குதித்து விளையாடும் மெத்தை எனப் பல்வேறு அரங்குகள் இருந்தன. அந்த அரங்குகளுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக் கட்டணம்: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது இதுவரை ஐந்து இலட்சம் பேர் வருகை புரிந்நதாகக் கூறினார்கள்.
முடிவுரை:
பொருட்காட்சிக்கு வருகை புரிந்தது மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பொழுது போக்கிற்காக நாங்கள் சென்று வந்த நிகழ்வுமிகவும் பயனுள்ளதாகவும் அறிவார்ந்த சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்தது.
0 Comments:
Post a Comment