தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 35.38 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா 4-வது அலையில், ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி தொற்று அதிகபட்சமாக 3 ஆயிரம்வரை சென்றது. அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 419 என்ற நிலைக்கு வந்தது. இந்நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் தொற்றால் 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் பரிசோதனை
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கரோனா பரிசோதனை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு என்ன வகையான காய்ச்சல் என கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்மூலம் சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகிறது. இதுவே தமிழகத்தில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம். தமிழகத்தில் ப்ளூ, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுடன் கரோனா பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
புதிதாக 533 பேருக்கு தொற்று
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஆண்கள் 274, பெண்கள் 259 என மொத்தம் 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 479 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment