இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள் இந்த தேசத்தின் வாழ்விலும்⸴ தேசத்திலுள்ள மக்களின் வாழ்விலும் மிக முக்கியமான நாளாகும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் சிறப்பு நாளாகும்.
ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சி இந்தியா முழுவதிலும் அரங்கேறியது. கொடுங்கோலாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியக் குடியரசு தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
குடியரசு என்பதன் அர்த்தம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததாக கொண்டாடும் நாள் தான் குடியரசு தினம் ஆகும்.
குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள்படுகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே குடியரசு ஆட்சி முறையாகும்.
இந்தியக் குடியரசு தினம்
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்த பின்பு இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. இது மக்களாட்சியை குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பின் 1950ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்ˮ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின் காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதற் கட்டமாக சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகின்றது.
கொண்டாடும் முறை
இந்தியப் பிரதமர் டெல்லியில் உள்ள இந்திய கேட் நினைவிடத்திற்குச் சென்று சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஏதாவது ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
பின் சிறப்பு விருந்தினர் உடன் இணைந்து அந்த ஆண்டில் சிறப்பாகச் செயற்பட்ட பாதுகாப்பு வீரர்களுக்கு பதக்கம் கொடுத்து கௌரவிக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி காவல் அணிவகுப்பைப் பார்வையிட வேண்டும்.
பாரம்பரிய மதிப்புகளைக் குறிக்கும் கலாசார நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டும். அந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்ட காவலர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்படல் வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கொடியேற்றி இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவார்கள்.
முடிவுரை
மக்களின் விருப்புக்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது தான் சரியான ஆட்சி நிலவும்.
இந்த உலகில் மிகப்பெரிய குடியரசு நாட்டின் குடிகளாக இருப்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். உண்மையான குடிமக்களாக இருந்து குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்வோம். வாழ்க பாரதம்.
0 Comments:
Post a Comment