சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய கட்டுரை..!
குறிப்பு சட்டகம்
முன்னுரை
சுற்றுச்சூழல் மாசுபாடு
நிலம், நீர், காற்று மாசு
தொழிற்சாலை கழிவு
முடிவுரை
முன்னுரை:
மனிதனால் தான் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நாம் வாழும் இந்த இயற்கையான பூமியில் மனிதன் செய்யும் சில தவறுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து தாவரங்களும், விலங்குகளும் பேரழிவை சந்திக்கின்றன. நாம் செய்யும் இந்த தவறுகளால் விலங்குகள் மட்டுமின்றி நமக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று போன்ற அனைத்துப் பகுதிகளும் மாசடைந்து வருகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாடு
சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது உலகம் எங்கிலும் பரவி கடுமையான பேரிடர்களை உண்டாக்கி உயிரினங்களின் வாழ்விற்கும் மனிதர்களின் வாழ்விற்கும் அச்சுறுத்துதலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த உலகில் வாழும் மக்கள் அசுத்தமான காற்று, மாசுபட்ட தண்ணீர் மற்றும் ஒலியின் பேரிரைச்சல் ஆகியவற்றுடனே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உலகில் சுமார் 200 மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் மாசினால் பாதிப்படைந்து வருகிறார்கள்.
மனிதன் செய்யும் தவறான செயல்பாடுகள் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக சுற்றுசூழல் மாசடைவது பெருகி வருகிறது. இதனால் மனிதர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், நாம் வாழும் பூமியின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையும் உயிரினங்களும் அழிந்து வருகின்றன.
காற்று மாசு:
வாகனங்களும், தொழிற்சாலைகளும் விடும் நச்சுப் புகைகள் வாயுமண்டலத்தில் கலந்து அமில மழைகளை உண்டாக்குகின்றன. இதனால் இந்த பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றது. மேலும், இதன் காரணமாக ஓசோன் படலமும் தேய்ந்து கொண்டே வருகிறது.
காற்று மாசடைவதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி இந்த உலகில் வாழும் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என்று அனைத்து உயிர்களும் பாதிப்பு அடைகின்றன.
நில மாசு:
மனிதர்கள் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பாலித்தீன் பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் இந்த நிலத்தில் பல சேதத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எத்தனை ஆண்டானாலும் மட்காதவை என்று நம் அனைவருக்குமே தெரியும். இருந்தும் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த மட்காத பொருட்கள் தான் நிலம் மாசைடைய முக்கிய காரணமாக இருக்கிறது.
நீர் மாசு:
நீர் நிலைகளில் துணி துவைத்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது போன்ற செயல்களால் நீரானது மாசடைகின்றது. இதனால் விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பல்வேறு வகையான நோய்கள் உருவாகின்றன.
தொழிற்சாலை கழிவு:
தொழிற்சாலை கழிவு
இந்த உலகில் தொழிற்சாலைகள் நகரத்தில் மட்டுமன்றி கிராமங்களிலும் அதிகரித்து வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து திட, திரவ, வாயு கழிவுகளை பெருமளவில் வெளியேற்றுகின்றன.
இந்த கழிவுகளால் சுற்றுப்புறம் பெருமளவில் பாதிப்படைந்து வருகிறது. தொழிற்சாலைக் கழிவுகளால் மனிதனுக்கு புற்றுநோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, உடல் உறுப்பு பாதிப்படைதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த தொழிற்சாலைகளால் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
முடிவுரை:
இனி வரப்போகும் நம் தலைமுறைக்கு சுற்றுச்சூழலை மாசடையாமல் வைத்து கொள்ளும் முறையை பற்றி தெளிவாக கூற வேண்டும். நம் உடலை எப்படி சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அதேபோல நம் வீடு, தெரு, நாடு என சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்து கொள்வோம். நம்மையும் நம் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்து பாதுகாப்போம்.
0 Comments:
Post a Comment