சிறுவர் கதைகள் – திறமையான குள்ளன்
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள்.
ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள்.
“நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை” என்றான் அவன்.
கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர்.
” ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்” என்றான் விறகுவெட்டி.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான்.
நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள்.
“இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்” என்று நினைத்தான் அவன்.
” நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்” என்றான் அவன்.
அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள்.
அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன்.
அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது.
” தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்” என்றான் மூத்தவன்.
எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். ” ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?” என்று அலறினான் இரண்டாமவன்.
” கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்” என்று ஆறுதல் சொன்னான் குள்ளன்.
நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
” வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?” என்றான் அவன்.
” எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்” என்றாள் அவள்.
நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
கதவு தட்டும் ஓசை கேட்டது. ” இந்த நேரத்தில் யார்? கதவைத் திற” என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள்.
சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள்.
விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை.
” நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டான் அவன்.
” நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது” என்றாள் அவள்.
அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். ” காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்” என்றாள் அவள்.
குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது” என்று குழம்பினான் அவன்.
“நேரமாகி விட்டது. புறப்படுங்கள்” என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி.
அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான்.
அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர்.
” நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்” என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான்.
பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான்.
கீழே இறங்கிய அவன், ” அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்” என்றான்.
எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள்.
குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. ” பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்” இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்” என்றான் குள்ளன்.
” இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள்.
சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள்.
” நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்” என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர்.
தன் மகனைப் பார்த்துக் கிழவி, ” இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன்.
பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்” என்றாள்.
” அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?” என்று கேட்டான் அரக்கன்.
” நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்” என்றாள் அவள்.
குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது.
கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. “ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது” என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான்.
சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான்.
நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், ” அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்” என்றான்.
இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள்.
பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. ” என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்” என்றாள்.
அறைக்குள் நுழைந்த அவன், ” அம்மா! இங்கு யாருமே இல்லையே” என்று அலறினான்.
அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. ” ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். ” கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?” என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன்.
இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள்.
ஒருவாறு மனம் தேறிய அரக்கன், ” என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்” என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.
” என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா” என்று கத்தினான் அவன்.
கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.
” அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்” என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர்.
” என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை” என்றான் மூத்தவன்.
” அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்றான் குள்ளன்.
எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை.
” ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?” என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
இதைப் பார்த்த குள்ளன், ” அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்” என்றான்.
எல்லோரும், ” எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்” என்றார்கள்.
வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான்.
“ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்” என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது.
” பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து” என்று கத்தினான் அவன்.
கதவைத் திறந்த கிழவி, ” என் மகனுக்கு என்ன?” என்று கேட்டாள்.
” உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்.
மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். ” இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்” என்று என்னை அனுப்பினார்” என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.
” ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?” என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள்.
அந்தப் பையை வாங்கிய அவன், ” இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.
” இனி இந்த அரக்கனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன்.
எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள்.
” மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்” என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள்.
அவர்கள் தந்தையும் தாயும், ” மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
” அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற்காசுகளுடன் வந்து இருக்கிறோம்” என்றான் குள்ளன்.
சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன்.
வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், ” மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்” என்றாள்.
” என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
” அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?” என்று அழுதுகொண்டே கேட்டான் அவன்.
“மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது” என்று அறிவுரை சொன்னாள் அவள்.
” நீ சொன்னபடியே நடக்கிறேன்” என்றான் அவன்.
பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
0 Comments:
إرسال تعليق