10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆப்சென்ட் எவ்வளவு?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆனவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி துறை வெளியிடவில்லை. அதனால், பிளஸ் 2 தேர்வு போல், ஆப்சென்ட் அதிகரித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 13ல் துவங்கி, ஏப்.,3ல் முடிந்தது. இந்த தேர்வில், மொழி பாட தேர்வில் கூட, 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து, நமது நாளிதழில் வெளியிட்டதும், அமைச்சர் மகேஷ் நீண்ட விளக்கம் அளித்தார்; சட்டசபையிலும் விளக்கம் அளித்தார்.
இடைநிற்றல் மாணவர்களை, தேர்வு பட்டியலில் சேர்த்து, ஹால் டிக்கெட் வழங்கியதால், ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரித்ததாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. பிளஸ் 1 மொழி பாட தேர்வில், 12 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகினர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த, 6ம் தேதி துவங்கியது. தமிழ் பாட தேர்வு முடிந்துள்ளது. இந்த தேர்வை எவ்வளவு பேர் எழுதினர்; எவ்வளவு பேர் ஆப்சென்ட் ஆகினர் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடவில்லை.
ஏற்கனவே, 10ம் வகுப்பு பொது தேர்வின் செய்முறை தேர்வில், 25 முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியானது. ஆப்சென்ட் மாணவர்களை செய்முறை தேர்வுக்கும், பொது தேர்வுக்கும் வரவழைக்க, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு பலன் கிடைத்ததா என்று தெரியவில்லை.
தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்; ஆப்சென்ட் ஆனது எத்தனை பேர் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கவில்லை. விபரங்கள் மறைக்கப்படுவதால், ஆப்சென்ட் எண்ணிக்கை, பிளஸ் 2வை போல் அதிகமாக உள்ளதா என, பல்வேறு தரப்பினரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
0 Comments:
إرسال تعليق