> பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் அதிக பிழைகள்: முழு மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் அதிக பிழைகள்: முழு மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் அதிக பிழைகள்: முழு மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கணினி அறிவியல் வினாத்தாளில் அதிக பிழைகள் உள்ளதால், அவற்றுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் 2022-23-ம் கல்விஆண்டுக்கான பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், கணினிஅறிவியல் தேர்வு மார்ச் 17-ம்தேதி நடைபெற்றது. இப்பாடத்தேர்வுக்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தன

ஆனால், இதில் பெரும்பாலான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெவ்வேறு பொருள்படும்படியும், அதிக அளவில் எழுத்து மற்றும் பொருள் பிழைகளுடனும் இடம்பெற்றிருந்தன. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பமடைந்தனர்.

இன்று (ஏப்.10) பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், கணினி அறிவியல் வினாத்தாளில் உள்ள குளறுபடிகளுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள், கணினி அறிவியல் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளின் 2-ம் பக்கத்தில் பகுதி 1-ல் (ஒரு மதிப்பெண்-கொள்குறி வகை) முதல் வினாவுக்கு அளிக்கப்பட்ட 4 விடைகளிலும் முதல் எழுத்து சிறிய எழுத்தாக (Small Letters) இருக்க வேண்டும். ஆனால் அனைத்தும் பெரிய எழுத்தாக (Capital Letters) ஆக இருந்தன. இதேபோன்று 3-வது வினாவில் ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகள் உள்ளன.

3-வது பக்கத்தில் 7-வது வினாவில் தமிழில் சரங்கள் என்பதற்கு பதிலாக சரகங்கள் என்றும் ஆங்கிலத்தில் ஸ்டிரிங் (String) என்றமுக்கிய வார்த்தையே இல்லாமலும் உள்ளது. 10-வது வினாவில் விடைகள் அனைத்தும் சிறிய எழுத்துகளில் தொடங்க வேண்டும். ஆனால் பெரிய எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

13-வது வினாவுக்கான தமிழ்விடைகள் தவறாகவும், ஆங்கிலத்தில் சரியாகவும் அளிக்கப்பட்டுள்ளன. 15-வது வினா SetA, SetB என்று கொடுப்பதற்கு பதிலாக Set A, Set B என இடைவெளி விட்டு தவறாக உள்ளது. இதுபோன்று இடைவெளி விட்டு கணினியில் தட்டச்சு செய்தால் தவறு (Error) என்றுதான் பதில் வரும்.

இதேபோன்று பகுதி 2-ல் 19மற்றும் 24-வது வினாக்கள் தவறாகஉள்ளன. பகுதி 3-ல் சில வினாக்களில் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில் தவறுகள் உள்ளன.

பகுதி 4-ல் 33-வது வினா பாய்வு கட்டுப்பாட்டு கூற்றுகளை கொண்ட சி நிரலை பைத்தானில் இயக்குவதற்கான படிநிலைகளை எழுதுக என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் தவறாக கேட்கப்பட்டுள்ளது. 34-வது வினாவில் Algorithm என்ற கணினி ஆங்கிலச் சொல் ‘முறை’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ‘நெறிமுறை’ என்பதுதான் சரியானது.

இதேபோன்று கணினி அறிவியல் வினாத்தாள் முழுவதுமே எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், பொருட்பிழைகள், தமிழ்- ஆங்கிலமொழிபெயர்ப்பில் தவறுகள் எனஅதிக அளவில் நிறைந்துள்ளன. இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

எனவே, தவறான வினாக்களுக்கு உரிய முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இதற்குரிய வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட வேண்டும் என்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 கணினி அறிவியல் புத்தகங்களில் பக்கத்துக்கு பக்கம் பிழைகள் இருப்பதை ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஏற்கெனவே (24.08.2022) சுட்டிக்காட்டியது. தற்போது வினாத்தாளும் ஏராளமானபிழைகளுடன் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு குழப்பத்தைதான் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.

எதிர்காலத்தில் இந்த பிழைகள், தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் பள்ளிக் கல்வித் துறையும், அரசு தேர்வுகள் இயக்ககமும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.




Share:

0 Comments:

إرسال تعليق