தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு, ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பை உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டாக தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்வழி கல்வியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இலவசக் கல்வி உரிமை சட்டத்தில், 1 முதல் 8- ம் வகுப்பு வரை இலவச கல்விதான் அளிக்க வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு கட்டணமாக ரூ.65 வசூலிக்க கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
மாணவர்களிடம் கட்டணம் கேட்டால் தர மறுக்கின்றனர். இதனால், தேர்வு கட்டணத்தை ஆசிரியர்களே செலுத்த வேண்டியிருக்கிறது. இதேபோல், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலக்கு அளித்ததுபோல், 9-ம் வகுப்பு வரை தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் இதே நடைமுறைதான் உள்ளது. கடந்த ஆண்டே தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்ட தேர்வு குழுவே கட்டணத்தை நிர்ணயிக்கிறது.
இத்தொகை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு ஆகிய மூன்று தேர்வுகளின் கேள்வித்தாள்களுக்காக வசூலிக்கப்படுகிறது. அரசுதான் கட்டண விலக்கு அளிக்க முடியும், என்றனர்.
0 Comments:
إرسال تعليق