பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஒரு பள்ளி மாணவனின் ஐ.டி.,யை இருவேறு பள்ளிகளில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு 'எமிஸ்' ஐ.டி., மட்டுமே உருவாக்கி பயன்படுத்த வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை சி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்கள் 'எமிஸ்' எனப்படும் கல்வி மேலாண்மைக்கான தகவல் அமைப்பில் சேகரிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக அடையாள எண் (ஐ.டி.,) உருவாக்கப்படுகிறது.
இந்த ஐ.டி.,யின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம், செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து காட்டுவதற்காக ஒரே மாணவர் பெயரில், இரண்டு 'எமிஸ்' ஐ.டி.,கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனர் சார்பில் சி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், 'முதன்முறையாக பள்ளியில் சேரும் மாணவருக்கு மட்டுமே புதிய 'எமிஸ்' ஐ.டி.,யை உருவாக்க வேண்டும். பிற பள்ளியில் இருந்து மாணவர் பள்ளியில் சேரும் போது ஏற்கனவே 'எமிஸ்' ஐ.டி., உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். 'எமிஸ்' ஐ.டி., தெரியவில்லை எனில் பெற்றோர் அலைபேசி எண், பிறந்தநாள், படித்த பள்ளி விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி மாணவரின் ஐ.டி.,யை கண்டறிய வேண்டும். புதிய ஐ.டி., பெற புலம் பெயர் தொழிலளாளர்களின் குழந்தைகளாக இருப்பின் மாற்றுச் சான்றிதழை இணைக்க வேண்டும். இல்லை எனில் ஆதார், இருப்பிட, பிறப்பு சான்றிதழ்கள் வழங்கி எமிஸ்' ஐ.டி., பெறலாம்', என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment