> 10th Tamil Unit 6 - பன்முகக் கலைஞர் Book Back Answer ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Tamil Unit 6 - பன்முகக் கலைஞர் Book Back Answer

10th Tamil Unit 6 - பன்முகக் கலைஞர் Book Back Answer

புறவய வினா

பாடநூல் வினாக்கள்:

1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு

ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி

ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

விடை : ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

2. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

விடை : ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

குறுவினா (பாடநூல் வினாக்கள்)

1. "கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

விடை :

கலைஞரைப் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்று பேராசிரியர் அன்பழகனார் கூறுவார்.

சிறுவினா (பாடநூல் வினாக்கள்)

1. தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

★ மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய 'நீராருங் கடலுடுத்த' எனும் பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாகப் பாட வழிவகுத்துள்ளார்.

2010ஆம் ஆண்டு கோவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார்.

தமிழ் மீது தீராத பற்றுகொண்ட கலைஞர், இலக்கியத்திலும் பெரும்பங்காற்றினார். நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில்குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளையும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.

நெடுவினா

போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

குறிப்புச் சட்டகம்:

முன்னுரை

போராட்டக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

நாடகக் கலைஞர்

திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்

முடிவுரை

முன்னுரை

கலைஞர் கருணாநிதி, தன்னுடைய பல்கலை திறமையினால் தமிழுக்குத் தொண்டாற்றியவர். கலைஞர் கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு சூன் திங்கள் மூன்றாம் நாள் பிறந்தார். கலைஞர் பகுத்தறிவு கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர். படிப்பவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர். கலைத் துறையில் வாகை சூடிய படைப்பாளர். முத்தமிழிலும் வல்ல வித்தகர்.

போராட்டக் கலைஞர்

கலைஞர், திருக்குவளையில் தொடக்கக் கல்வியும், திருவாரூரில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1921இல் சென்னை மாகாணத்திற்கு நீதிக்கட்சியின் சார்பில் முதல் அமைச்சராக இருந்த பனகல் அரசரின் சாதனைகளைக் கூறும் நூலைப் படித்தார். அந்நூல் அவருக்கு அரசியல் அரிச்சுவடியாக அமைந்தது. தன்னுடைய 14ஆம் வயதில் பள்ளி முடிந்த பின்பு தான் எழுதிய "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்" என்ற பாடலை முழங்கியபடி, இந்தித் திணிப்பை எதிர்த்து திருவாரூர் வீதிகளில் மாணவர்களுடன் சேர்ந்து போராடினார்.

பேச்சுக் கலைஞர்

இளமைப்பருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை ஈர்த்தன. பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் அவரைக் கவர்ந்தது. இளம் வயதில் "நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குப் பேச்சுப்பயிற்சி அளிப்பதற்காகச் "சிறுவர் சீர்திருத்தச் சங்கம்" மாணவரிடையே ஒற்றுமையுணர்வை வளர்த்தெடுக்கத் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்

கலைஞர் எழுதிய 'பழநியப்பன்' என்னும் முதல் நாடகம், 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ' உட்பட பல நாடகங்களை எழுதினார். தான் எழுதிய 'தூக்குமேடை' என்னும் நாடகத்தில் நடிகர் எம்.ஆர். இராதாவின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராகக் கருணாநிதி நடித்தார். அந்நாடகத்திற்கான பாராட்டுவிழாவில்தான் அவருக்குக் 'கலைஞர்' என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.

திரைக் கலைஞர்

எம்.ஜி.ஆர். முதன்முதலாக நடித்த 'ராஜகுமாரி' (1947) படத்துக்கான முழுவசனத்தையும் கலைஞர் எழுதினார். திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் நடிப்பில், மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம். மலைக்கள்ளன் முதலான படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கலைஞரின் வசனங்கள் 'சொல் புதிது சுவை புதிது' என்று கேட்போர் வியக்கும் வண்ணம் அமைந்தன.

சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்திக்கும் கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதினார். அதன் பிறகு, சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவான திரும்பிப் பார், மனோகரா, ராஜாராணி முதலிய திரைப்படங்களும் கலைஞரின் கதை, வசனத்தில் தொடர்ந்து வெளிவந்தது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா கதைக்குக் கலைஞர் வசனம் எழுதியதோடு, அப்படத்தில் நான்கு பாடல்களும் எழுதினார். 1947ஆம் ஆண்டு, தன் 23ஆம் வயதில் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கிய கலைஞர், 2011இல் 92ஆம் வயது வரை நிறைவாய் எழுதினார்.

இயற்றமிழ்க் கலைஞர்

தன்னுடைய 22ஆம் வயதில் மலேசிய மண்ணில், சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் மலேயா கணபதி என்பவர், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு இறந்ததை அறிந்து கலைஞர் 'கயிற்றில் தொங்கிய கணபதி' என்ற சிறிய கட்டுரை நூலை எழுதினார்.

நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில்குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளையும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தம் வாழ்க்கை வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" என்னும் தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என்னும் பெயரில் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார்.

முடிவுரை

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சிந்தனையிலேயே தம் ஆயுளைச் செலவிட்ட கலைஞர், தாம் சென்றவிடமெல்லாம் செறிவாகத் தமிழ் பேசித் தன்மானத்தை, தமிழ் உணர்வை, தமிழிலக்கியத்தை, பகுத்தறிவை, மத ஒருமைப்பாட்டை, சமூக நல்லிணக்கத்தை நமக்கெல்லாம் ஊட்டினார். தமிழின் பெருமிதங்களையும் விழுமியங்களையும் மீட்டெடுக்க எண்ணிய கலைஞர், அதற்கான பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts