> பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த வாட்ஸ்-அப் தளம்: 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு ~ Kalvikavi -->

பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த வாட்ஸ்-அப் தளம்: 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு


தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு பகிர்வதற்காக வாட்ஸ் அப் வழியாக புதிய தளத்தை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ளது. இதற்காக கல்வி மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) வலைத்தளத்தில் உள்ள 1.27 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1.02 கோடி செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் முன் எஞ்சியுள்ள எண்களையும் சரிபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: மாணவர்களின் கல்வி நலன் சார்ந்ததிட்டங்கள் அனைத்தையும் உரியநேரத்தில் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். அதேபோல், மாணவர்களுக்குதரப்படும் நலத் திட்ட விவரங்களை பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


அதன்படி பெற்றோர்களுக்கு தகவல்களை பகிர ஏதுவாக அவர்களின் செல்போன் எண்களை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதன் பலனாக இதுவரை 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.


மிகக்குறுகிய காலத்தில் இந்த பணியினை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் விவரத்தை தெரிவிப்பது மட்டுமின்றி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு இது உதவியாக அமையும்.தொடர்ந்து எஞ்சியுள்ள 25 லட்சம் பெற்றோர்களின் செல்போன் எண்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது.


இந்த பணியையும் பள்ளி திறப்பதற்கு முன்பாக விரைந்து முடிக்கபள்ளி தலையாசிரியர்கள் மற்றும்ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment