அரசு பள்ளிகளில் விதிமீறும் மாணவர்கள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில், விதிமுறைகளை மீறும் மாணவர்களை கண்டிக்கும்போது, பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன. அதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 29,143 மாணவர்கள் படிக்கின்றனர்.
இம்மாணவர்கள், பள்ளிக்கு வரும் போது, விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும், காலை, 9:15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். 'லோ ஹிப்', 'டைட் பிட்' பேன்ட்கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.
மாணவர்கள் அணியும் சட்டை நீளம் 'டக் இன்' செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். சீரற்ற முறையில் 'இன்' பண்ணக்கூடாது. கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை, கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் சிலர், இத்தகைய விதிகளை கடைபிடிப்பதில்லை.
வகுப்பு ஆசிரியர்கள் கண்டிக்க முற்பட்டாலும், கீழ் படிவதில்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் பலரும், நீளமாக தாடி மற்றும் தலை முடி வளர்த்தியும், முறையாக சீருடை அணியாமலும் அவ்வபோது அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோர்களை அழைத்து தகவல் தெரிவித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்த, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பெற்றோர்களும் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment