“தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பணியாணை வழங்காமல் காலம் கடத்தும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கொடுங்கோன்மையாகும்.அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு அறிவித்து அதன்படி பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.
ஆனால், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் தமிழக அரசு இதுவரை பணிநியமனம் செய்ய மறுத்து வருவதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களின் முந்தைய பணியையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, இருளில் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அவ்வரசாணையை நான் அப்போதே வன்மையாகக் கண்டித்து திரும்பப்பெறுமாறு வலியுறுத்தியதோடு, ஆசிரியர்கள் நடத்திய தொடர்ப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டும் ஆதரவு தெரிவித்தேன். ஆட்சிக்கு வந்தவுடன் மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம், தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் பணியாணை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்து ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை அவற்றை நிறைவேற்றாது காலங்கடத்துவது வாக்களித்த ஆசிரியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
அறிவுசார் தலைமுறையை உருவாக்கும் அறப்பணி புரியும் ஆசிரியர்களை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு திமுக அரசும் தள்ளியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். இதற்கிடையில் தமிழக அரசின் துரோகத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த 410 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் பணி நியமனம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பு வழங்காமல், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் உயர்நீதிமன்றம் தீர்வினை வழங்கியுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட இதர 40,000 ஆசிரியர் பெருமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். ஆகவே, தமிழக அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பினையே முன் மாதிரியாக கொண்டு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment