பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.!

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.!


இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்றுகாலை தொடங்குகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

7.5% ஒதுக்கீட்டில் 664 இடங்கள்: இதில், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38, முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 664 இடங்கள்உள்ளன. இந்த 3 பிரிவு இடங்களுக்கும் சேர்த்து 404 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

அதன்படி, மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இன்று இரவு வெளியிடப்படும். நாளை மாலை 5 மணிக்குள் இதற்கு ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து, இதர சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். அதன்பிறகு, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை மொத்தம் 3 சுற்றுகளாக நடக்க உள்ளது.அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் தங்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான விரிவான கால அட்டவணை, கலந்தாய்வில் பங்கேற்கும் வழிமுறைகள் ஆகியவை அரசின் https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

23,395 இடங்கள் அதிகம்: நடப்பு கல்வி ஆண்டில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 32,376 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 23,395 இடங்கள் அதிகம்.

எனினும், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் 2,965 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டில் வரும்1 லட்சத்து 79,938 இடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts