பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் செய்தி |
கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது.
இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களை படிப்படியாக வளர்த்தெடுக்கும் சூழல் உள்ளது. மனதளவில் பாதிப்பு உள்ள மாணவர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 800 மருத்துவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க முடியாது.
மனநலம் சார்ந்து தான் திருத்த முடியும் அதுதான் எங்களது கடமை. மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் இல்லாமல் அனைத்து மாவட்டத்தையும் முன்னேற்ற முயற்சிகள் செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனுக்காக 67 பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் தாண்டி ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது இதனை கண்டறிந்து நம் வீட்டுப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ அவ்வாறு நல்வழிப்படுத்துவோம்” என்றார்.
0 Comments:
Post a Comment